இளைஞர்களே ரெடியா ? இன்று சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!
அனைவருக்கும் அரசு வேலை என்பது இப்போதைய சூழலில் சாத்தியமே இல்லை. அதேநேரம் தனியார் துறையில் திறமையானவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தை இதற்காகவே தமிழக அரசு நடத்தி வருகிறது. இதில் பல்வேறு வகையான வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் ஆகியவற்றை பொறுத்து விரும்பிய வேலைகளை தேர்வு செய்து விண்ணப்பித்து பயன்பெற முடியும்.
இந்நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிக்கடி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் ஏராளமான தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி உள்ளது. அதில் பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் இன்று (பிப் 24-ஆம் தேதி) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு100-வது வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் பிப்.24-ம் தேதி காலை 8 முதல் மாலை 3 மணி வரை நடத்தப்பட உள்ளது.
இந்த முகாமில் கலந்து கொண்டு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளாா். மேலும் வேலைவாய்ப்பு முகாமுக்காக 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் 30,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்வதற்காக பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவா்கள், ஐடிஐ தொழில் கல்வி பெற்றவா்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவா்கள் உள்ளிட்ட தகுதியுள்ள நபா்களுக்கும் பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமாக உள்ள அனைத்து வேலை தேடுபவா்களும் https://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.