சொந்த வீடு யோகம் அமையவில்லை என ஏங்குகிறீர்களா? தினமும் இதை மட்டும் பண்ணுங்க
சொந்த வீடு, சொந்த நிலம் வாங்கும் யோகம் என்பது அனைவருக்கும் அமைவது கிடையாது. சிலர் சொந்தமாக நிலம் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களால் வீடு கட்ட முடியாது. நிறைய பணம் இருந்தாலும் சிலருக்கு சொந்த வீடு வாங்கவோ, கட்டவோ முடியாது. இன்னும் சிலருக்கு சொந்த வீடு கட்ட வங்கி கடன் கிடைக்காமல், கட்டிய வீட்டை முடிக்க முடியாமல் பாதியில் நிறுத்தும் நிலை ஏற்படும். அப்படியே கஷ்டப்பட்டு வீட்டை கட்டி முடித்தாலும் அதில் வாழ்வதற்கு கூட சிலருக்கு யோகம் இல்லாமல் இருக்கும். இன்னும் சிலர், சொந்த வீடா? அதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என சொல்லி நம்பிக்கை இழந்து இருப்பார்கள்.
சொந்த வீடு யோகம் யாருக்கு அமையும்?
சொந்த வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற கனவு அனைவருக்கும் இருந்தாலும் இந்த யோகம் அனைவருக்கும் அமைவது கிடையாது. ஒருவருடைய ஜாதகத்தில் சொந்த வீடு, நிலம் ஆகியவற்றை குறிப்பது லக்னத்திற்கு நான்காம் இடமாகும். இங்கு சுப கிரகங்கள் பலம் பெற்று இருந்தால் அவர்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உண்டு. நான்காம் இடத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தால் பூர்வீக வீடே சொந்தமாக அமையும். லக்னத்திற்கு நான்காம் பாவத்தில் ஏற்படக் கூடிய திசை, நான்காம் பாவாதிபதியின் திசை நடந்தால் சொந்த வீடு வாங்க முடியும். இதற்கு நான்காம் பாவத்திற்கான கிரகத்திற்குரிய தெய்வத்தையும், வீடு, மனை ஆகியவற்றிற்கு காரணமான கிரகமான செவ்வாய் கிரகத்தையும் வணங்கி வர சொந்த வீடு யோகம் அமையும்.
சொந்த வீடு அமைய செல்ல வேண்டிய கோவில்,வழிபாடு :
சொந்த வீடு, நிலம் அமைய வேண்டும் என நினைப்பவர்கள், வீடு மற்றும் நிலம் தொடர்பான பிரச்சனைகளில் இருப்பவர்கள் ஆகியோர் செல்ல வேண்டிய கோவில் சென்னைக்கு அருகில் உள்ள சிறுவாபுரி. இங்குள்ள முருகப் பெருமானிடம் மனதார வேண்டிக் கொண்டாலே சொந்த வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு ஏதாவது ஒரு வகையில் வழி கிடைக்கும். இது பலரும் தங்களின் வாழ்வில் அனுபவ ரீதியாக கண்ட உண்மையாகும். செவ்வாய் பகவானுக்கு உரிய செவ்வாய் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறப்பு. நேரில் சென்று வழிபட முடியாதவர்கள், வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகப் பெருமான் படத்திற்கு முன் ஒரு அகலில் நெய் விளக்கு ஏற்றி வைத்து, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பதிகத்தை தினமும் நம்பிக்கையுடன் படித்து வந்தால் விரைவில் சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும்.