டீசல் கார் வாங்க பிளான் இருக்கா..? உங்களுக்கான லிஸ்ட் இதோ..!
இந்திய ஆட்டோமொபைல் துறை சமீப காலமாக நல்ல வளர்ச்சியை சந்தித்து வருகிறது கார் உற்பத்தியாளர்கள் தான் இதற்கு முக்கிய காரணம். இவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் கார்களை உற்பத்தி செய்து வருகிறார்கள். எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வந்த போதிலும் டீசல் கார்கள் மீதான வசீகரிப்பு இன்னும் மக்களிடம் குறையவில்லை. இந்தியாவில் வரும் மாதங்களில் பல நிறுவனங்கள் தங்களது டீசல் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளன. நீங்கள் டீசல் கார் வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவராக இருந்தால், விரைவில் அறிமுகமாகவுள்ள கார் மாடல்கள் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
2024 எம்ஜி க்ளாஸ்டர் (Gloster) ஃபேஸ்லிஃப்ட் :
பெரிய சைஸ் SUV பிரிவில் கடுமையான போட்டியை சந்தித்து வந்த எம்ஜி Gloster தனது புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரம் மூலம் மறுபடியும் மார்கெட்டை ஆட்சி செய்ய வந்துள்ளது. ஏழு இருக்கைகள் கொண்ட இந்த SUV காரில் முன்பிருந்த அதே 2.0 லிட்டர் டர்போ டீசல் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சிறந்த வெளிப்புற வடிவமைப்பு மற்றும் அதிகபட்ச வசதிகள் ஆகியவை சேர்க்கப்பட்டதன் மூலம் சாலையில் நிற்கும்போது இதன் தோற்றம் நம் கண்ணைக் கவர்கிறது. புதிய க்ரில், அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லைட் செட்டப், லேட்டஸ்ட் பம்பர் போன்ற வசதிகள் காரணமாக முன்பை விட சிறந்ததாக தோன்றுகிறது. இந்தக் காரை வாங்க வேண்டும் என விரும்புகிறவர்கள் இந்த வருட கடைசி வரை பொறுத்திருக்க வேண்டும். இந்த SUV காரின் விலை ரூ.40 லட்சம் முதல் ரூ.44 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 டோர் மஹிந்தரா தார்:
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த 5 கதவுகள் கொண்ட மஹிந்தராவின் தார் கூடிய விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதை உறுதிப்படுத்தியுள்ள மஹிந்தரா நிறுவனம், ஆண்டின் நடுப்பகுதியில் இது விற்பனைக்கு வரும் என கூறியிருக்கிறது. தற்போது 3 கதவுகள் உள்ள மாடல்களோடு இதுவும் விற்பனைக்கு வரும். 2,2 லிட்டர் டீசல் இஞ்சின் ஆப்ஷன் உள்ள இந்த கார், 4×4 மற்றும் 4×2 டிரைவ் ஆப்ஷனில் வருகிறது.
டாடா கர்வ் :
மக்களிடன் ஆவலை கிளப்பிய இன்னொரு கார் டாடா கர்வ். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் நிறுவனத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை.
கூபே வடிவமைப்பில் வரவுள்ள இந்த SUV காரில் அனைத்து பிரிவு மக்களுக்கும் கவரும் வகையில் பல பவர்ட்ரைய்ன் ஆப்ஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்களுக்கு தேவையான மாடலை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளும் வசதி இதில் கிடைக்கிறது. ஆரம்பத்தில் இது எலெக்ட்ரிக் வாகனமாகத்தான் அறிமுகம் ஆகும் எனக் கூறபட்ட நிலையில் டீசல் இஞ்சின் தவிர பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனையும் அறிமுகப்படுத்த உள்ளது டாடா நிறுவனம்.