கும்பகோணம் நவக்கிரக கோயில்களுக்கு போக திட்டமா..? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவக்கிரக கோவில்களுக்கான சிறப்பு பேருந்து இன்று முதல் இயக்கப்படுகிறது. இதற்கு பயணக் கட்டணமாக ஒருவருக்கு ரூ. 750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் 9 நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து, மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் நவகிரக சிறப்பு பேருந்துகள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான தொடக்க விழா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்த சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோயில்களுக்கு செல்லும் பயணிகள் சவுகரியமாக செல்ல பேருந்தில் சார்ஜர் சாக்கேட், பயணிகள் குடிநீர் பாட்டில் வைப்பதற்கு அனைத்து இருக்கையிலும் அதற்குரிய வசதிகள், வழிகாட்டி மூலம் பயணிகளுக்கு கோயில்களின் தல வரலாறுகளை அறியும் வகையில் மைக் உடன் கூறிய ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மகேந்திர குமார், கோட்டாட்சியர் பூர்ணிமா, தொழில்நுட்பம் பொது மேலாளர் முகமது நாசர், முதன்மை தணிக்கை அலுவலர் சிவக்குமார், தொழில்நுட்ப துணை மேலாளர் சதீஷ்குமார், துணை மேயர் தமிழழகன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ”நவகிரக கோவில்களுக்கு ஒரு மாத காலத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு இதே போல் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வரும் காலங்களில் நவகிரக கோவில்களுக்கு முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அடிப்படையில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். பரிச்சார்த்த முறையில் தற்போது இந்த நவகிரக கோவில்களுக்கு தொடங்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்து படிப்படியாக அறுபடை வீடுகளுக்கும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *