மக்களே ரெடியா ? இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி : அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்..!
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறும் எனவும், போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி பொங்கல் நாளான ஜன.15-ம் தேதி அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாளான நேற்று (16-ம் தேதி) பாலமேடு பகுதியிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜன.15-ல் அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாளான நேற்று (16-ம் தேதி) பாலமேடு பகுதியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தன.
இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரியமாக கருதப்படுவதும், உலகப்புகழ் பெற்றதுமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற உள்ளது. முன்னதாக உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக் கால் கடந்த 8-ம் தேதி நடப்பட்டது. பின்னர், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தலை அடுத்து, இந்த போட்டியில் பங்கு பெறும் காளை உரிமையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்கள் கடந்த ஜனவரி 10 மற்றும் 11-ம் தேதிகளில் madurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தனர். இன்று நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர். காளைகளை அடக்கி முதலிடம் பிடிக்கும் வீரருக்கு தமிழக அரசு சார்பாக முதல் பரிசாக கார் வழங்கப்படுகிறது. அதேபோல் சிறந்த காளைகளுக்கான பரிசும் வழங்கப்படவுள்ளது. இன்றைய போட்டியில் சுமார் 1000 காளை பிடி வீரர்களும், சுமார் 800 காளைகளும் பங்கேற்கும் என தெரிகிறது.
முன்னதாக அமைச்சர் மூர்த்தி தெரிவிக்கையில்., பரிசுப் பொருட்களை தூக்கி எறியாமல் கையில் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். பரிசு தாமதமாக கொடுத்தால் காளைகளின் எண்ணிக்கை குறையும் எனவே விரைவாக பரிசையும் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார். மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுயை விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று தெரிவித்தார்.