கேப்டனுக்கு எதிராக கலகம் பண்றீங்களா.. ஆப்பு எப்படி இருக்கு.. இஷான் கிஷனை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டதை தொடர்ந்து ரோகித் சர்மா ரசிகர்கள் பலரும் அவரை சோசியல் மீடியாவில் கிண்டல் செய்து வருகின்றனர்.

பிசிசிஐ தரப்பில் 2024-25ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தப் பட்டியலில் இருந்து இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்பட்ட இருவரும் காயம் காரணமாக ஓய்வெடுத்ததோடு, ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்தனர்.

குறிப்பாக இஷான் கிஷன் மனசோர்வு என்று கூறி தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன் நாடு திரும்பினார். அதன்பின் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்பட்ட போது, திடீரென மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். இது முன்னாள் வீரர்கள் மத்தியிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஏற்கனவே மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இது ரசிகர்களிடையே ஏற்றுக் கொள்ளப்படாத சூழலில், இந்திய அணியில் இருந்து விலகி ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார் இஷான் கிஷன். இதுமட்டுமல்லாமல் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதையும் இஷான் கிஷன் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வு குழு ஆகியோர் இஷான் கிஷனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட தயாராகவில்லை. அதேபோல் ஜெய் ஷா மறைமுகமாக அனைத்து வீரர்களும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தியும் இஷான் கிஷன் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இதன் காரணமாகவே இஷான் கிஷன் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு எதிராகவே கலகம் செய்த இஷான் கிஷனுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆப்பு வைத்துவிட்டதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் மும்பை அணி ரசிகர்களும் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *