வீட்டுக்கடன் வாங்குறீங்களா? இந்த 4 விஷயத்த மிக கவனமா கையாளுங்க!
வீடு என்பது பலரின் கனவு; அதை நினைவில் செயல்படுத்துவது என்பது பெரும் செலவு. இதனால், வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் எவ்வளவு கடன் கிடைக்கும் என்று வங்கிகளை நாடிச் செல்கின்றனர். சிறந்த கடன்களைப் பெற்று அந்த தொகைக்குள் வீட்டைக் கட்டி முடிப்பது தான் சாதூர்யம். அல்லாமல் கடன் தொகையைப் பெற்று கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதும் இந்த காலத்தில் அதிகமாக நடந்து வருகிறது. அந்த வகையில், வீட்டிற்காக கடன் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய 4 விஷயங்களைத் தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். சந்தை மாற்றங்கள், பதிவு கட்டணங்கள் என அனைத்தும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பணத் தேவை
ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான முன்பணத் தொகை குறித்து நாம் கணக்கிட வேண்டும். குறிப்பாக ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்து என வைத்துக் கொள்வோம். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நிர்ணயித்த வழிகாட்டுதல்களின்படி, ரூ.75 லட்சத்துக்கும் அதிகமான கடனுக்கான வீட்டு மதிப்பில் குறைந்தபட்சம் 25 விழுக்காடு தொகையைக் கடன் வாங்குபவர்கள் முன்பணமாக வழங்க வேண்டும். அதாவது ரூ.2 கோடி வீட்டிற்கான முன்பணமாக 50 லட்சம் ரூபாயைச் செலுத்த வேண்டும். முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் போன்ற கூடுதல் செலவுகளாக சுமார் 14 லட்ச ரூபாயை சேர்க்கலாம்.
தற்போதுள்ள கடன்கள்
முன்பணம் மற்றும் முன்செலவுகளுக்கு அப்பால் உங்களுடைய தற்போதைய நிதிச் செலவுகளை முழுமையான மதிப்பீடு செய்வது முக்கியமானது. உங்கள் வருவாயில் கணிசமான பகுதி ஏற்கனவே பிற கடன் மாதத் தவணைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தால், புதிய கடன் பெறுவதில் தாமதம் ஏற்படும். எப்போதும் கடன் எண்ணிக்கையை குறைப்பது, நமக்கு கடன் கிடைக்கும் தருணத்தை மேம்படுத்துவது போன்றதாகும். இது கடன் பெறும் தகுதியை வளரச் செய்கிறது.
கிரெடிட் புள்ளிகளின் முக்கியத்துவம்
உங்கள் கிரெடிட் ஸ்கோர் வீட்டுக் கடன் வாங்கும்போது ஒரு முக்கியமான காரணமாக இருக்கும். இது சரியாக இல்லை என்றால் கடன் வாங்கும் தகுதி மற்றும் உங்கள் கடனின் விதிமுறைகள் இரண்டையும் பாதிக்கிறது. ஒரு வலுவான கிரெடிட் ஸ்கோர் என்பது கடன் வழங்குபவர்களுக்கு நீங்கள் ஒரு பொறுப்பான கடன் வாங்குபவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இது சிறந்த வட்டி விகிதங்கள் மற்றும் கடன் நிலைமைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் தேவையான அளவை விட குறைவாக இருந்தால், வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அதை மேம்படுத்துவதற்கு நேரம் ஒதுக்குவது சிறந்ததாக இருக்கும்.
வட்டி விகிதங்கள்
உங்கள் முதல் வீட்டை வாங்குவது குறித்து யோசிக்கிறீர்களா? குறைந்த வட்டி விகிதங்களுக்காகக் காத்திருப்பது கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், சொத்து விலைகள் பொதுவாக காலப்போக்கில் உயரும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த மதிப்பின் அதிகரிப்பு, வட்டி விகிதங்களின் வீழ்ச்சியிலிருந்து சாத்தியமான சேமிப்பை ஈடுசெய்யும்.
நீங்கள் ரூ.2 கோடி சொத்தை வாங்கப் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் குறையும் என்ற நம்பிக்கையில், கடன் வாங்காமல் திட்டத்தை ஒத்திவைப்பதினால், அந்த சொத்தின் மதிப்பு இருமடங்காக உயர வாய்ப்பிருக்கிறது. தற்போது, வீட்டு கடன்களின் வட்டி விகிதங்கள் சுமார் 8.5% ஆக உள்ளன. நீண்ட கால இலக்குகளை ஆதரிக்கும் ஒரு சொத்தை நீங்கள் கண்டறிவதே வாங்குவதற்கான சிறந்த நேரம். இந்த வழியில், உங்கள் முதல் வீடு ஒரு நிதிச் சுமைக்கு பதிலாக மகிழ்ச்சியின் ஆதாரமாக மாறும்.