மேஷ லக்னம்; மிருகசீரிட நட்சத்திரம்; கிரகமாலிகா யோகம் – அயோத்தி பிராணப் பிரதிஷ்டை நாள், நேரம் எப்படி?
இந்த அற்புதமான தருணம் எப்படிப்பட்ட முகூர்த்தத்தில் அமைந்திருக்கிறது என்பதை அறிய நாளைய தினத்தின் பஞ்சாங்கத்தையும் அறிய வேண்டியது அவசியம். இதுகுறித்துப் பிரபல ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டோம்.
பஞ்சாங்கம்
“எந்த ஒரு முக்கியமான செயலையும் தொடங்கும் முன் பஞ்சாங்கம் பார்ப்பது நம் மரபு. திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் ஆகிய ஐந்தும் ஒரு நாளில் எப்படி அமைந்திருக்கிறது என்பதே பஞ்ச அங்கம் எனப்படும் பஞ்சாங்கம் எனலாம். ஒரு நாளைத் தொடங்கும் முன்பு பஞ்சாங்கம் பார்த்தே தொடங்க வேண்டும். அவ்வாறு அந்த நாளின் தன்மையை அறிந்துகொள்வதே நமக்கு நற்பலன்களைக் கொண்டுவரும் என்கிறார்கள்.
“திதேஸ்ச ஸ்ரீயமாப்நோதி வாராத் ஆயுஷ்ய வர்தனம்
நக்ஷத்ராத் ஹரதே பாபம் யோகாத் ரோக நிவாரணம்
கரணாத் கார்ய ஸித்திஸ்ச பஞ்சாங்க பலமுத்தமம்”
என்பது சாஸ்திர வாக்கியம்.
இதன் பொருள், தினமும் அதிகாலையில் எழுந்தவுடன், இன்று என்ன திதி என்று அறிந்துகொண்டால் நம் செல்வம் பெருகும். அந்த நாள் என்ன கிழமையை என்று அறிந்துகொண்டால் ஆயுள் வளரும். என்ன நட்சத்திரம் என்பதையறிந்துகொண்டால் நம் பாபங்களில் சிறிது குறையும். அந்த நாளில் அமையும் யோகம் என்ன என்பதை அறிந்துகொண்டால் நோய் விலகும். கரணம் என்ன என்று தெரிந்துகொண்டால் காரியம் ஸித்தி உண்டாகும் என்கிறது அந்த ஸ்லோகம்.