திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மற்ற மதத்தினரும் சேவை செய்ய ஏற்பாடு செய்யப்படும் – தேவஸ்தானம்

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஸ்ரீவாரி சேவை என்ற பெயரிலான தன்னார்வ சேவை அமைப்பை நிர்வகித்து வருகிறது. தேவஸ்தானத்தின் தன்னார்வ சேவை அமைப்பில் லட்சக்கணக்கான தன்னர்வலர்கள் உறுப்பினராக சேர்ந்து திருப்பதி மலையில் மட்டுமல்லாமல் தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

இது தவிர அன்னதான கூடத்தில் காய்கறிகள் வெட்டி கொடுப்பது, உணவு பரிமாறுவது, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டுவது, திருப்பதி மலைகள் டைரிகள் காலண்டர்கள் ஆகியவற்றை விற்பனை செய்வது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அவர்கள் சேவையாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பக்தர்கள் பேசும் டயல் ஈகோ நிகழ்ச்சி திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அப்போது நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய உசேன் பாஷா என்பவர் ஸ்ரீவாரி சேவை அமைப்பில் உறுப்பினராக சேர்ந்து சேவை செய்வதற்காக ஆன்லைன் மூலம் எனது பெயரை பதிவு செய்து கொள்ள நான் முயற்சித்தேன். ஆனால் இயலவில்லை.

எனவே ஸ்ரீவாரி சேவை அமைப்பில் உறுப்பினராக சேர்ந்து திருப்பதி மலையில் சேவை செய்யும் வாய்ப்பை எனக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுடன் பேசிய நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, உசேன் பாஷாவின் கோரிக்கை மூலம் வேற்று மதத்தினரும் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையான் பக்தர்களாக சேவை செய்ய விருப்பம் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே ஆஃப்லைன் அடிப்படையில் வேற்று மதத்தினர் தங்களுடைய பெயர்களை பதிவு செய்து ஸ்ரீவாரி சேவை திட்டம் மூலம் சேவை செய்ய வாய்ப்பு வழங்கவும், இதற்காக சிறப்பு நெறிமுறையை ஏற்படுத்தி ஆவன செய்யவும் தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

எனவே விரைவில் வேற்று மதத்தினரும் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையான் பக்தர்களுக்கு சேவை செய்து மாதவனுக்கு சேவை செய்த பெரும் பேறை அடைய தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *