திமிராக நடந்து கொண்ட இந்திய விக்கெட் கீப்பர்.. விளாசிய ஜெய் ஷா.. இனி யாரும் தப்பிக்க முடியாது
இந்திய அணியில் இருந்து தாமாக விலகிய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், அதன் பின் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் பேச்சை கேட்காமல் தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்து வருகிறார்.
ரஞ்சி ட்ராபி எனும் உள்ளூர் டெஸ்ட் தொடரில் ஆடுமாறு அவரை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் பிசிசிஐ-யின் தேர்வுக் குழு கேட்டுக் கொண்ட பின்னரும் அவர் அதை மதிக்கவில்லை. இந்த நிலையில், இஷான் கிஷனை விளாசி இருக்கிறார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா. அவரது பெயரை கூறாத அவர், சில வீரர்கள் யாருடைய பேச்சையும் கேட்காமல், உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் இருக்கிறார்கள் எனக் கூறி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது டி20 போட்டிகளில் தனக்கு பதிலாக ஜிதேஷ் சர்மாவுக்கு அணியில் விக்கெட் கீப்பராக ஆட வாய்ப்பு அளித்ததை பார்த்து அதிருப்தி அடைந்த இஷான் கிஷன், டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்ற போதும் பாதியில் வெளியேறினார். அவர் மனச் சோர்வில் இருப்பதாக பிசிசிஐ விளக்கம் அளித்தது.
அவரை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்றால் அவர் ரஞ்சி ட்ராபி போன்ற உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என வெளிப்படையாக கூறினார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். ஆனால், அவரது பேச்சை மதிக்காத இஷான் கிஷன், பரோடாவில், காயத்தில் இருந்து மீண்டு வரும் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். அது இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ-யை கோபப்படுத்தியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசும் போது இஷான் கிஷன் பெயரை குறிப்பிடாமல் பொதுவாக பேசினார் ஜெய் ஷா. “அவர்களிடம் நாங்கள் தொலைபேசியில் ஏற்கனவே பேசி இருக்கிறோம். இது குறித்து நான் கடிதமும் எழுத இருக்கிறேன். உங்கள் தேர்வுக் குழு தலைவர், உங்கள் பயிற்சியாளர் மற்றும் உங்கள் கேப்டன் உங்களை உள்ளூர் டெஸ்ட் போட்டியில் ஆடுமாறு கூறினால் நீங்கள் அதை செய்ய வேண்டும்.” என்றார் ஜெய் ஷா.
“இது குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி என்ன ஆலோசனை சொல்கிறதோ அதன்படி நாங்கள் செய்வோம். சில வீரர்கள் ஒரே நேரத்தில் குறைந்த ஓவர் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என அவர்கள் கூறலாம். ஆனால், இது யாரெல்லாம் உடற்தகுதியுடன், இளமையுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு பொருந்தும். இனியும் இது போன்ற நடவடிக்கையை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இது பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும்.” என்றார் ஜெய் ஷா.