அறிவித்தது போல் கோவிலுக்கு நன்கொடை அளித்த ஹனுமான் படக்குழு..!
தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்துள்ள படம் ‘ஹனு-மான்’. இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரிப்பில் ஜனவரி 12-ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.
‘ஹனு-மான்’ படத்தின் வசூலில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை அளிக்கப்படும் என படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி இதுவரை, விற்கப்பட்ட ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ. 5 நன்கொடையாக ஒதுக்கீடு செய்தனர். பிரீமியர் ஷோக்களில் மட்டும் ரூ.14 லட்சத்து 85,810 அளித்தனர். தற்போது, 53 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்த நிலையில், மேலும் ரூ.2.66 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளனர்.