அஸ்வின் பவுலிங் சர்ச்சை.. விக்கெட் எடுக்காமல் இருப்பதன் ரகசியம் இதுதான்.. முன்னாள் வீரர் விளாசல்
இந்திய டெஸ்ட் அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் குறித்து சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா. தற்போது நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஸ்வின் எதிர்பார்த்த அளவுக்கு விக்கெட்களை வீழ்த்தவில்லை.
இதை அடுத்து அஸ்வின் குறிப்பிட்ட பிட்ச்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துவார். அவருக்கு சாதகம் இல்லாத பிட்ச்களில் அவருக்கு விக்கெட் வீழ்த்த தெரியவில்லை எனக் கூறி இருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. அஸ்வின் மீது இந்த குற்றச்சாட்டு வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களின் போது கூறப்படும். ஆனால், தற்போது இந்திய மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரிலேயே அவர் மீது மீண்டும் இந்த சர்ச்சை கிளம்பி உள்ளது.
அஸ்வின் இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் 499 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இதில் இந்திய மண்ணில் 57 டெஸ்ட் போட்டிகளில் 346 விக்கெட்களும், வெளிநாட்டில் 40 டெஸ்ட் போட்டிகளில் 153 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார். சராசரியாக பார்த்தால், இந்திய மண்ணில் ஒரு போட்டியில் 6 விக்கெட்களும், வெளிநாட்டில் ஒரு போட்டியில் 3.8 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார். சுமார் 37 சதவீதம் வெளிநாட்டில் குறைவாக விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இந்திய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே இதே ஒப்பீட்டில் வெளிநாட்டில் 30 சதவீதம் குறைவாக விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட் வீழ்த்த முடியாது என்றாலும் அஸ்வினுக்கு முன் சுழற் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஆஸ்திரேலியாவை தவிர மற்ற நாடுகள் அனைத்திலும் பெரிய வித்தியாசம் இன்றி விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் தன் சொந்த நாடான இலங்கையை விட, இங்கிலாந்தில் அவர் சிறந்த பவுலிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருக்கிறார்.
அந்த வகையில் அஸ்வின் இந்திய மண்ணில் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக எந்த பந்துவீச்சுக்கும் பெரிதும் உதவாத தட்டையான ஆடுகளங்களே பயன்படுத்தப்பட்டன.
அஸ்வின் அந்த 2 போட்டிகளிலும் சேர்த்து 9 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். இங்கிலாந்து அணியில் அறிமுக சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி அதே இரண்டு போட்டிகளில் 14 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இதை அடுத்து ஆகாஷ் சோப்ரா அஸ்வின் குறித்த பிட்ச் சர்ச்சையை மீண்டும் கிளப்பி இருக்கிறார். அது பற்றி அவர் கூறுகையில், “நீங்கள் தொடர்ந்து ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் ஆடி விட்டு தட்டையான பிட்ச்சுக்கு போனால், அதே சமயம் எதிரணி அதிரடி ஆட்டம் ஆடும் மனநிலையுடன் இருந்தால் நீங்கள் அதிகம் யோசித்து செயல்பட வேண்டும். அஸ்வின் தற்போது 500 விக்கெட் என்ற மைல்கல்லுக்கு அருகே இருக்கிறார். அவர் இது போன்ற சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவார் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால், உண்மையில் அஸ்வின் இந்த தொடரில் இதுவரை சிறப்பாக செயல்படவே இல்லை.” எனக் கூறி இருந்தார் ஆகாஷ் சோப்ரா.