அஸ்வின் டீமை பற்றி கவலைப்படவில்லை.. சுயநலமாக ஆடினார்.. விளாசிய முன்னாள் இங்கிலாந்து வீரர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் சரியாக பந்து வீசவில்லை. அவருக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. எனினும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த நிலையில் அஸ்வின் தன் தனிப்பட்ட சாதனையை மனதில் வைத்து ஆடியதால் தான் சரியாக பந்து வீசவில்லை. இல்லையெனில் அவர் இதை விட சிறப்பாக பந்து வீசி இருப்பார். எந்த வீரராக இருந்தாலும் அணிக்காக ஆட வேண்டும். சொந்த சாதனைக்காக சுயநலமாக ஆடக் கூடாது என முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் விளாசி இருக்கிறார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 496 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இன்னும் 4 விக்கெட்கள் வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை அவர் நிகழ்த்தலாம் என்ற நிலையில் இருந்தார். ஆனால், முதல் இன்னிங்ஸில் விக்கெட் வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்,
இது குறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில், “அஸ்வின் தன் முழு கவனத்தையும் தன் சொந்த மைல்கல் சாதனை மீது தான் வைத்து இருந்தார். அவர் வெற்றிகரமாக பந்து வீச வாய்ப்பு கிடைத்தது. அவர் ஆஃப் சைடுக்கு தூரமாக வீசிய போது விக்கெட் வீழ்த்த அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர் “ஓவர் தி விக்கெட்” முறையிலேயே தொடர்ந்து பந்து வீசினார்.” என்றார்.
மேலும், பீட்டர்சன் கூறுகையில், “அவரிடம் திறமை இல்லை என்றோ, இங்கிலாந்து அவரது பலவீனத்தை கண்டு பிடித்தது என்றோ நான் சொல்ல மாட்டேன். ஆனால், அணியின் மீது கவனம் இருக்க வேண்டும். தனிப்பட்ட நபரின் மீது இருக்கக் கூடாது. அவர் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தி 500 விக்கெட் சாதனையை செய்து விட்டால் அவர் இன்னும் நிதானமாக ஆடுவார்” என்றார்.