அஸ்வின் இந்திய அணிக்கே கேப்டனாகி இருக்க வேண்டியவர்.. குண்டைத் தூக்கிப் போட்ட கவாஸ்கர்

இந்திய அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகி இருக்க வேண்டியவர் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து கூறி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

உலகின் சிறந்த டெஸ்ட் சுழற் பந்துவீச்சாளரான அஸ்வின் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தன் 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார். அதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் மிட்-டே பத்திரிக்கையில் தான் எழுதிய கட்டுரையில் அஸ்வின் இந்திய அணியின் கேப்டனாக ஆகி இருக்க வேண்டியவர் என்று கூறி இருக்கிறார்.

இது பற்றி கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில், “ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றியதற்கு வாழ்த்துகள். அவர் என்ன ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர்! விளையாட்டின் மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் மற்றும் எப்போதும் புதிய மற்றும் வித்தியாசமான ஒன்றை முயற்சிக்கத் தயாராக இருக்கிறார், அது ரன்-அப், டெலிவரி ஆக்ஷன் அல்லது, பேட்ஸ்மேனை நிலைகுலைய வைக்கும் டெலிவரிகளாக இருக்கலாம்,” என்று பாராட்டி இருந்தார்.

மேலும், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகள் விளையாடியபோது,​​அஸ்வினுக்கு இந்திய கேப்டன் பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனாலும், சிறப்பாகச் செயல்பட்டீர்கள் அஸ்வின். நீங்கள் மேலும் பல விக்கெட்டுகளையும், புதிய பந்துவீச்சுகளையும், மேலும் எதிர்காலத்தில் வித்தியாசமான பந்துவீச்சு முறைகளையும் பெற வாழ்த்துகிறேன்,” என்று கூறி இருக்கிறார்.

ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகள் என கவாஸ்கர் குறிப்பிடும் நிகழ்வு 2021இல் நடந்தது. அப்போது இந்திய டெஸ்ட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றது. அதே சமயத்தில் ஒருநாள் தொடரில் பங்கேற்க மற்றொரு அணி இலங்கை சென்றது. அப்போது லாக்டவுன் விதிமுறைகள் இருந்ததால் ஒரே நேரத்தில் இரண்டு அணிகளை அனுப்பியது பிசிசிஐ. அப்போது டெஸ்ட் அணிக்கு அஸ்வின் கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால், அது நடக்கவில்லை. அதைத் தான் குறிப்பிட்டு இருக்கிறார் கவாஸ்கர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *