விஜயகாந்த் போல இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும் – நடிகர் சங்கம் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கமல் உருக்கம்
சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தன் மீதான விமர்சனங்களை கடந்து மேலே வந்தவர் விஜயகாந்த் என்று புகழாரம் சூட்டினார். மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, நடிகர்கள் கமல்ஹாசன், ராதாரவி, சரத்குமார், சிவக்குமார், சத்யராஜ், விக்ரம், ஜெயம் ரவி, மன்சூர் அலிகான், நடிகைகள் அம்பிகா, சிம்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பாளர்கள் முரளி, ராதாகிருஷ்ணன், சத்ய ஜோதி தியாகராஜன் உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டனர். விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகர், சண்முக பாண்டியன், விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டார். அனைவரும், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நாசர், தான் அணியும் வெள்ளை உடையில் சிறிய கருப்புகூட படியாமல் வாழ்ந்து சென்றவர் விஜயகாந்த் என்று புகழாரம் சூட்டினார். விஜயகாந்தின் மகனுடன் இணைந்து படத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாக விஷால் அறிவித்தார். விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சூழல் வரும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று நடிகர் சரத்குமார் உருக்கமாக பேசினார். நடிகர் சங்கம் தலை நிமிர்ந்து நிற்க தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்திற்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என்று ஆர்.கே. செல்வமணி கேட்டுக் கொண்டார்.
தாய் உள்ளம் கொண்டவர் விஜயகாந்த் என்று ராதாரவி கண்ணீர் மல்க தெரிவித்தார். தனக்கு பிடிக்காதவர்களைக்கூட அழைத்து பேசும் தைரியம் விஜயகாந்திற்கு உண்டு என்றும், அவரைப் போல இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும் என்றும் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
பூண்டி கல்லூரியில் தனக்கு பிரச்னை ஏற்பட்டபோது தன்னை காப்பாற்றி அழைத்து வந்தவர் விஜயகாந்த் என்று வாகை சந்திரசேகர் தெரிவித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, விஜயகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதே தான் இறந்துவிட்டதாக மன்சூர் அலிகான் உருக்கமாகத் தெரிவித்தார். விஜயகாந்த் வழியில் மொய் விருந்து நடத்தி பணம் வசூலித்து நடிகர் சங்க கட்டிடத்தை கட்டலாம் என்றும் மன்சூர் அலிகான் யோசனை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதியாக பிரேமலதா விஜயகாந்தின் இரங்கல் வீடியோ பதிவு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று பிரேமலதா கேட்டுக் கொண்டார்.