அன்று ஒயின்ஷாப்பில்! இன்று பல்கலையில்! வியக்க வைக்கும் முத்துக்காளை! ஆராய்ச்சி படிப்புக்கும் ரெடி
கஷ்டப்பட்டு படித்து 3 பட்டங்களை பெற்ற நடிகர் முத்துகாளை 4ஆவதாக என்ன படிக்க போகிறார் தெரியுமா?
இதுகுறித்து முத்துக்காளை ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது:
வணக்கம் நான் காமெடி ஸ்டன்ட் நடிகர் முத்துக்காளை. எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகே உள்ள சங்கம்பட்டி. நான் சிறிய வயதில் படிக்கும் போது படிப்பில் ஆர்வமும் அக்கறையும் இருந்தால் கூட விளையாட்டுத்தனம் அதிகமாக இருந்தது.
அதனால் படிப்பின் மீது கவனம் போகவில்லை. இதனால் குடும்பத்தில் வறுமை இருந்தது. என் உடன் பிறந்தவர்கள் 4 தங்கைகள் ஒரு அண்ணன். எங்கள் வீட்டில் மொத்தம் 6 பேர். இதனால் புத்தகம் கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை. எனவே பள்ளிக்கு தொடர்ந்து என்னால் செல்ல முடியவில்லை.
வாத்தியாரும் புத்தகம் வாங்கிட்டு வந்தால்தான் பள்ளிக்கு வரணும் என சொல்லிவிடுவார். இதனால் படிப்பு தடைப்பட்டு, வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. இதன் பிறகு சென்னைக்கு வந்து சினிமாவில் வாய்ப்புத் தேடி ஒரு ஸ்டன்ட் நடிகரானேன். எனக்கு படிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது எப்படியென்றால் கல்வியா செல்வமா வீரமா என்ற பாடலை போல் நான் முதலில் வீரத்தை கற்றுக் கொண்டு, செல்வத்தை சேர்த்து அதன் பிறகு கல்விக்கு வந்தேன்.
இதனால் 50 வயதுக்குபிறகுதான் என்னால் கல்வி பக்கமே போக முடிந்தது. இதனால் இளைஞர்களுக்கு நான் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் படிக்க வேண்டிய வயதில் சரியாக படித்துவிடுங்கள். எதை வேண்டுமானாலும் இழந்தாலு கல்வியை மட்டும் இழக்காதீங்க. இந்த கல்வி உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, உங்கள் தலைமுறையையே காப்பாற்றும்.
கற்றவர்களுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு! எனக்கு வசதி வந்தால் படிக்க வேண்டும் என விரும்பினேன். எனக்கும் வாய்ப்பு அமைந்தது. குடியிலிருந்து மீண்டு வந்த போது எனக்கு தெளிவான பார்வை இருந்தது. இளமையில் இழந்ததை மீட்டெடுக்க வேண்டும் என தோன்றியது. நான் படித்த போது என்னை நிறைய பேர் கிண்டல் செய்தார்கள்.
இந்த வயதில் படித்து இவர் என்ன செய்ய போகிறார் என கேட்டனர். படிப்புக்கு வயது ஒரு தடையே இல்லை என நான் சாதித்து காட்ட ஆசைப்பட்டேன். இதனால் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பிஏ வரலாறு படித்தேன். பிறகு தமிழ் மீது இருந்த ஆர்வத்தால் எம்.ஏ. தமிழ் படித்தேன். திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், வள்ளலார் உள்ளிட்டோரை பற்றி படிக்க விரும்பினேன்.
எம்ஏ தமிழில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். இதன் பிறகும் எனக்கு படிப்பின் மீது ஆர்வம் குறையவில்லை. அதனால் BLit படித்தேன். அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். நேற்றுதான் ரிசல்ட் வந்தது. நான் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருந்தாலும் சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன். இந்த படிப்புதான் எனக்கு சொத்து.
இளைஞர்கள் படியுங்கள். விவேகானந்தர் சொன்னது போல் படிப்புதான் இந்த நாட்டை உயர்த்தும். இதனால் உங்களால் இந்த நாட்டுக்கும் வீட்டுக்கும் ரொம்ப பெருமையாக இருக்கும். நான் குடியிலிருந்து மீண்டு 7 ஆண்டுகள் ஆக போகிறது. எந்த சேனலை பார்த்தாலும் நான் ஒயின்ஷாப் முன்பு படுத்துகிடந்த காட்சிகளையே போட்டார்கள்.
முத்துக்காளை ஒரு குடிகாரன் குடிகாரன் என இருந்த நிலையை மாற்றி என்னை எல்லோரும் திரும்பி பார்க்க ஏதாவது வித்தியாசமாக செய்ய விரும்பினேன். மது குறித்து ஒரு ஆராய்ச்சி செய்யலாம் என இருக்கேன். மதுவை குடிக்கணும்னு ஏன் தோன்றுகிறது. அது குடிச்சத்துக்கப்பறம் உடலில் என்ன செய்கிறது. இதை படித்து என்னால் ஒரு 2 பேரை குடியிலிருந்து மீட்டு வர முடியும் என்றால் அதுவே எனக்கு வெற்றிதான். அடுத்த படிப்பு அதுதான் என நினைக்கிறேன். எல்லாம் இறைவன் செயல்! இவ்வாறு முத்துக்காளை தெரிவித்தார்.