ஊழல் வழக்கு தொடர்பாக சோதனைக்குச் சென்ற அமலாக்கத் துறை குழு மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக ஊழல் தொடர்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மண்டல அளவிலான தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம், வடக்கு 24 பர்கானாஸ் மாட்டத்தின் சந்தேஷ்காலி கிராமம் அருகே நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ரேஷன் விநியோக ஊழல் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மண்டல அளவிலான தலைவர்களான ஷாஜகான் ஷேக் மற்றும் சங்கர் ஆதியா இருவரின் வீடுகளுக்கு சோதனை நடத்தச் சென்ற போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஷாஜகான், ரேஷன் விநியோக ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மாநில அமைச்சர் ஜியேதிபிரியோ மல்லிக்கின் நெருங்கிய உதவியாளராக கருதப்படுகிறார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காட்சிகளில் அதிகாரிகள் சென்ற கார் கண்ணாடிகள் தாக்கப்பட்டிருந்தன. சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அந்த இடத்துக்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, “தாக்குதல் நடத்தியவர்கள் திரிணமூல் காங்கிரஸின் உள்ளூர் தலைவர்களால் ஆதரிக்கப்படும் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக இருக்கலாம். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தொடர்வது தேசத்துக்கு அச்சுறுத்தல் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநில பாஜக முன்னால் தலைவர் ராகுல் சின்கா இந்தத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், “ஷாஜகான் ஷேக் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த டான். இங்கு அவருக்கு எதிராக பல கொலை வழக்குகள் உள்ளன. அவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை” என்று தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்பி ஜெகன்நாத் சர்கார், “நாட்டுக்கு எதிராக செயல்படும் அமைப்புகள் வலுபெற்று வருகின்றன. வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் என தினமும் கைப்பற்றப்பட்டாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மேற்கு வங்க அரசை உடனடியாக நீக்கி விட்டு மாநிலத்தில் அவசரநிலையை அமல்படுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது எல்லாம் சரியாகும் அதற்கு பின்னர் அமலாக்கத் துறை குழு மீது யாரும் தாக்குதல் நடத்த மாட்டார்கள்” என்றார்.

இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குணால் கோஷ், ‘மேற்கு வங்கத்தில், மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைப்புகள் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி அவர்களைத் துன்புறுத்தியும், எதிர்மறையான அறிக்கைகளையும் பரப்பி மக்களைத் தூண்டி வருகிறார்கள்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *