Attukal Paya: உடல் அலுப்பை போக்கும் ஆட்டுக்கால் பாயா

தென்னிந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உணவுகளில் ஒன்று தான் ஆட்டுக்கால் பாயா.

இது பெரும்பாலும் காலை உணவாக இடியாப்பம், அப்பம் உடன் சாப்பிடப்படுகிறது. இதை எப்படி இலகுவாகவும் சுவையாகவும் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ஆட்டுக்கால் – 4

பெரிய வெங்காயம் – 3

தக்காளி – 2

பச்சை மிளக்காய் – 4

துருவிய தேங்காய் – 1 கப்

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

கொத்தமல்லி தூள் – 2 தே.கரண்டி

மிளகு தூள் – 2 தே.கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை :

எண்ணெய் – தேவையான அளவு

பட்டை – 2

ஏலக்காய் – 2

கிராம்பு – 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தே.கரண்டி

புதினா – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை

முதலில் சுட்ட ஆட்டுக்காலை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின் அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து அதில் ஆட்டுக்கால், நறுக்கிய வெங்காயத்தில் முக்கால் பாகம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையம் நன்றாக கிளறிவிட வேண்டும்.

அதன் பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அதிக தீயில் 6 – 7 விசில் வரும் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.

பின்னர் குக்கரில் பிரஷர் தானாக அடங்கியதும் மூடியை திறந்து மேலும் சில நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவிட வேண்டும்.

பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு அதில் மீதம் உள்ள நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். அடுத்து அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலையை சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னர் கொதித்து கொண்டிருக்கும் ஆட்டு கால் பாயாவில் ஊற்றி இறக்கினால் வீடே மணமணக்கும் வகையில் ஆட்டுக்கால் பாயா தயார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *