AUS vs PAK : பென் ஸ்டோக்ஸ்-ன் மறுஉருவமே.. பாவம்யா கங்காரு பாய்ஸ்.. லயனை பொளந்த பாகிஸ்தான் பவுலர்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக 9வது வீரராக களமிறங்கிய ஆமீர் ஜமால் 82 ரன்களை விளாசிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ரிஸ்வான் – சல்மான் இணை இணைந்து பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
சிறப்பாக ஆடிய ரிஸ்வான் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அரைசதம் அடித்த ஆகா சல்மான் 53 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 227 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி வீரர்கள் உற்சாகமாகினர்.
டெய்லண்டர்களை வீழ்த்திவிட்டு முதல் நாளின் கடைசி செஷனிலேயே நல்ல ஸ்கோரை எடுக்கலாம் என்று ஆர்வமாக இருந்தனர். ஆனால் பாகிஸ்தான் அணி தரப்பில் ஆமீர் ஜமால் – மீர் ஹம்சா கூட்டணி கடைசி விக்கெட்டுக்கு களத்தில் இருந்தது. இதில் ஆமீர் ஜமால் ஓரளவுக்கு பேட்டிங் செய்ய கூடியவர் என்பதால், முடிந்த அளவிற்கு பவுண்டரிகளில் ரன்களை எடுக்க தொடங்கினார்.
ஒவ்வொரு ஓவரிலும் ஹம்சாவிற்கு கடைசி பந்தை மட்டும் ஸ்ட்ரைக் கொடுத்துவிட்டு, ஆமீர் ஜமால் பவுண்டரிகளை விளாச தொடங்கினார். சில ஓவர்கள் களத்தில் தாக்குபிடித்த ஜமால், ஸ்பின்னர்களை சிக்சருக்கு அனுப்ப சூழலின் தீவிரத்தை ஆஸ்திரேலிய அணி அறியவில்லை. மீண்டும் ஹேசல்வுட் வீசிய பவுன்சரிலும் இன்னொரு சிக்சரை ஜமால் அடிக்க, உடனடியாக லபுஷேனை அட்டாக்கில் கொண்டு வந்தது.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் யார் வந்தாலும் அடிதான் என்று பென்ஸ்டோக்ஸ் பாணியில் பவுண்டரிகளை பொளந்து கட்டினார் ஜமால். எப்படி ஆஷஸ் தொடரின் போது பென் ஸ்டோக்ஸ் ஒற்றை ஆளாக ஸ்கோரை உயர்த்தினாரோ, அதேபோல் பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை ஜமால் உயர்த்தினார். சிறப்பாக ஆடிய அவர், 72 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பின் ஸ்டார்க்கையும் அட்டாக் செய்தார் ஜமால். கடைசி விக்கெட்டின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்த போது, ஆஸ்திரேலியா வீரர்கள் முகத்திலேயே விரக்தி வெளிப்படையாக தெரிந்தது.
இதனால் லயனை அட்டாக்கில் கொண்டு வந்த போது, பவுண்டரி மற்றும் சிக்சரை விளாசி பாகிஸ்தான் ஸ்கோரை 300 ரன்களை கடந்து கொண்டு சென்றார். இறுதியாக சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது 4 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 313 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணி முதல்முறையாஅக் சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.