AUS vs WI : உலகக்கோப்பை நாயகனுக்கு தலைகுனிவு.. தோல்விக்கு காரணமே இவர்தான்.. வெஸ்ட் இண்டீஸ் பாடம்
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கிய காரணம் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்த உலகக்கோப்பை நாயகன் ட்ராவிஸ் ஹெட் தான்.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்து இந்தியாவை வீழ்த்திய ட்ராவிஸ் ஹெட், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
முதல் இன்னிங்க்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களும், ஆஸ்திரேலியா 289 ரன்களும் எடுத்து இருந்தன. அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. எளிதாக இந்த இலக்கை சேஸிங் செய்யலாம் என எண்ணி ஆஸ்திரேலியா களமிறங்கியது.
ஆனால், அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் தவிர எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்து மீண்டும் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இதை அடுத்து 113 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா, மிடில் ஆர்டரில் பெரிய சறுக்கலை சந்தித்து 207 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது.
இரண்டு இன்னிங்க்ஸ் பேட்டிங்கிலும் தான் சந்தித்த முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறினர் ட்ராவிஸ் ஹெட். ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இது போல இரண்டு இன்னிங்ஸிலும் முதல் பந்தில் டக் அவுட் ஆன மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் ட்ராவிஸ் ஹெட். முன்னதாக 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் 2010இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரியான் ஹாரிஸ் இந்த மோசமான சாதனையை செய்து இருந்தனர்.