ஆட்டோ மாதிரி டிசைன்.. 2 பேர் மட்டுமே செல்லக்கூடிய எலெக்ட்ரிக் கார்.. டிசைன் குறித்த விவரங்கள்!
நாளுக்கு நாள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. மக்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் பிரபலமான வாகன நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பல புதிய நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் கால் பதித்து வருகின்றன. வாடிக்கையாளரக்ளை திணறடிக்கும் வகையில் புதிய புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தபடுகின்றன. வழக்கமான டீசல், பெட்ரோல் கார்களுக்கு மாற்றாக மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் மக்களை ஈர்க்க பலவித சலுகைகளும் தரப்படுகின்றன.
இந்நிலையில் ஜென்சால் எலெக்ட்ரிக் வாகன நிறுவனம் (Gensol Electric Vehicles) தங்களுடைய புதிய எலெக்ட்ரிக் காரை 2024 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து வாடகை டாக்ஸி சேவையிலும் ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்திடம் எலெக்ட்ரிக் வாகனம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜென்சால் எலெக்ட்ரிக் கார் அளவில் மிகவும் சிறியது. இரண்டு பேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரில் இரண்டு கதவுகள் உள்ளன. ஐரோப்பாவில் உள்ள சிறிய கார்கள் போல் இந்த எலெக்ட்ரிக் காரும் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் பார்ப்பதற்கு கொஞ்சம் பெரிதாக தோன்றுவதோடு LED DRL மற்றும் ஹாலஜன் விளக்குகளுடன் செவ்வக வடிவ ஹெட்லைட் உள்ளது. பெரிய கண்ணாடி வீடு போல் இருக்கும் இந்தக் காரில் அலாய் வீல் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் எந்த தடங்கலும் இல்லாமல் 200கி.மீ தூரம் வரை செல்லலாம் என ஜென்சால் நிறுவனம் கூறுகிறது. இந்த காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 80கி.மீ. நகர்ப்புறத்தில் வசிக்கும் நபர்களுக்கு இது ஏற்ற காராக இருக்கும். காரின் உள்ளே கேபினில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மேனுவல் ஏர்கார்ன் கட்டுப்பாடுகள், கருப்பு நிற தரைகள் உள்ளது.
மேலும் இந்தக் காரில் மூன்ரூஃப், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கிளவுட் அனாலிடிக்ஸ் எனப் பல புதிய வசதிகள் உள்ளது. ஆனால் இந்தக் காரின் அளவு மற்றும் டிரைவ்ட்ரைய்ன் போன்ற சிறப்பம்சங்களை இன்னும் ஜென்சால் நிறுவனம் கூறவில்லை.
மிகுந்த பெருமிதத்தோடு எங்களின் புதிய நவீன எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த உள்ளோம். நம்முடைய சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் எங்களின் பங்களிப்பு இருக்கும். தினசரி நகர்ப்புறங்களில் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரின் காரின் அனைத்து பாகங்களும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. புகையில்லாத போக்குவரத்து சேவையில் புரட்சியை ஏற்படுத்துவதே எங்களுடைய நோக்கம் என ஜென்சால் இஞ்சினியரிங் நிறுவனத்தின் மேலான்மை இயக்குனர் அன்மோல் சிங் கூறுகிறார்.
புனே நகரில் உள்ள ஜென்சால் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆலையில் தான் இந்த எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் காரை பரிசோதனை செய்யும் வசதியும் உள்ளது. காரைப் பற்றி முழு தகவல்களும் அறிமுக தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என ஜென்சால் நிறுவனத் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.