அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: விசிக தலைவர் திருமாவளவன் காளை வெற்றி!
தை திருநாள் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் முதன்முதலாக மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும், பாலமேட்டில் 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை காண திரண்டுள்ள வெளிநாட்டு, உள்நாட்டுப் பார்வையாளர்களால் மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை ஆட்சியர் தலைமையில் வீரர்கள் உறுதி மொழி ஏற்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களமிறங்குகின்றனர். மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் சார்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.
மாலை 4 மணி வரை நடைபெறும் போட்டியில் சுற்றுக்கு 50 முதல் 75 மாடுபிடி வீரர்கள் என மொத்தம் 8 சுற்றுகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விசிக தலைவர் திருமாவளவன் காளை வெற்றி பெற்றது. இரண்டாவது சுற்றில் அவிழ்க்கப்பட்ட திருமாவளவனின் காளை, சிறுத்தையாய் சீறி காளையர்கள் ஆட்டம் காண்பித்து வெற்று பெற்றது. அக்காளைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தங்கக்காசு பரிசாக வழங்கினார்.