அவனியாபுரம் கார்த்திக் வென்றது ஒன்னும் சாதாரண கார் இல்ல!! ஜப்பான் டெக்னாலஜி தான் எங்கே பார்த்தாலும்…!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கிய மாடுப்பிடி வீரருக்கு முதல் பரிசாக நிஸான் மேக்னைட் (Nissan Magnite) கார் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை என்ன? முதல் பரிசாக வழங்கும் அளவிற்கு இந்த நிஸான் காரில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

நம் தமிழ்நாட்டில் தை மாதம் துவங்கிவிட்டாலே கொண்டாட்டங்களும் துவங்கிவிடும். அத்தகைய கொண்டாட்டங்களில் முக்கியமானது ஜல்லிக்கட்டு ஆகும். மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட இந்த விளையாட்டிற்கு காளை மாடுகள் பல மாதங்களுக்கு முன்பு இருந்தே தயார் செய்யப்படுகின்றன. அதேபோல் மறுப்பக்கம், மாடுப்பிடி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொள்ள துவங்கிவிடுவர்.

அந்த அளவிற்கு பிரபலமான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுவது உண்டு. இதில் மிகவும் பிரசித்திப் பெற்றது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆகும். மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் என்ற பகுதியில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கவும், கலந்துக் கொள்ளவும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து கூட பலர் வருகை தருவது வழக்கம். அப்படிப்பட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று (ஜன.15) பொங்கல் திருநாளில் விமர்சையாக நடைபெற்றது.

எதிர்பார்த்ததை போல், மாடுப்பிடி வீரர்கள் திரளாக கலந்துக் கொள்ள, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடந்தது. 10 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டின் இறுதியில், 17 காளைகளை அடக்கிய மாடுப்பிடி வீரர் கார்த்திக் என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றார். அவனியாபுரத்தை சேர்ந்தவரான மாடுப்பிடி வீரர் கார்த்திக்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் நிஸான் மேக்னைட் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

விழாவில் கலந்துக் கொண்ட அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் கார் சாவியை மாடுப்பிடி வீரர் கார்த்திக்கிடம் வழங்கினர். ஜல்லிக்கட்டு துவங்குவதற்கு முன்பே, பரிசாக வழங்கப்பட இருந்த வெள்ளை நிற நிஸான் மேக்னைட் கார் மேடையில் நிறுத்தப்பட்டு இருந்தது. காரை பார்த்தால், சில வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட நிஸான் மேக்னைட் காரை போல் தெரிகிறது.

ஏனெனில், காரில் நிஸான் நிறுவனத்தின் பழைய லோகோ பொருத்தப்பட்டுள்ளது. நிஸான் நிறுவனம் தனது லோகோவை மாற்றி சில வருடங்கள் ஆகிவிட்டன. அதுமட்டுமின்றி, பரிசாக வழங்கப்பட்டுள்ள இந்த காரின் தோற்றம் பழைய ஜென்ரேஷன் மாடல் உடையது ஆகும். இப்போது, இந்த 2024இல் உருவாக்கப்படும் நிஸான் மேக்னைட் கார்கள் ஷார்ப்பான ஹெட்லைட்கள் மற்றும் தடிமனான க்ரோம் பார்டரை கொண்ட முன்பக்க கிரில் என மிகவும் மாடர்னான தோற்றத்தில் உருவாக்கப்படுகின்றன.

இந்தியாவில் தற்சமயம் எக்ஸ்.இ, எக்ஸ்.எல், எக்ஸ்.வி, கெஸா எடிசன், குரோ எடிசன் உள்ளிட்ட வேரியண்ட்களில் நிஸான் மேக்னைட் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த வேரியண்ட்டில் மேக்னைட் கார் மாடுப்பிடி வீரர் கார்த்திக்கிற்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. நிஸான் மேக்னைட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6 இலட்சத்தில் இருந்து ரூ.10.86 இலட்சம் வரையில் உள்ளன.

பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே மேக்னைட் கிடைக்கிறது. டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைப்பதில்லை. ஆனால், 1.0 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அல்லது 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் என இந்த இரண்டில் ஏதேனும் ஒரு பெட்ரோல் என்ஜின் உடன் மேக்னைட்டை வாங்கலாம். டர்போ பெட்ரோல் என்ஜினில் பவர் அவுட்-புட் சற்று அதிகமாக கிடைக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *