அடஅட.. மோடி-க்கு யோகம் தான்.. பணவீக்கம் சரிவு, உற்பத்தி அதிகரிப்பு..!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் புள்ளியல் மற்றும் திட்ட செயல்படுத்தும் அமைச்சகம் (MoSPI) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவின் சில்லறை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 5.09 சதவீதமாக சிறிது குறைந்துள்ளது.
ஜனவரி மாதத்தில் இது 5.10 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போதும் 5.09 சதவீதம் என்ற கணிசமான சரிவை பதிவு செய்துள்ளது. 42 பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பு 5.02 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டிருந்த நிலையில், உண்மையான பணவீக்க விகிதம் கணிப்பை விடவும் அதிகமாக உள்ளது.
பிப்ரவரி மாதத்தின் ரீடைல் பணவீக்க அளவுகள் ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கு வரம்பான 2-6 சதவீதத்திற்குள் இருப்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. கடந்த மாதம் பணவீக்க விகிதம் (-)0.11 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 0.16 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்திய கிராமப்புற பகுதிகளில் பணவீக்கம் 5.34 சதவீதமாக மாற்றமின்றி இருந்த வேளையில், நகர்ப்புற பகுதிகளில் பணவீக்கம் ஜனவரியில் இருந்த 4.92 சதவீதத்திலிருந்து 4.78 சதவீதமாகக் குறைந்துள்ளது.
உணவுப்பொருட்களின் பணவீக்கம் ஜனவரியில் 8.30 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 8.66 சதவீதமாக அதிகரித்துள்ளது.
காய்கறி விலைகள் ஜனவரியில் 27.03 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 30.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களின் பணவீக்கம் கடந்த மாதத்தை போல் (-)0.77 சதவீதமாகவே உள்ளது.
தொழில்துறை உற்பத்தி: ஜனவரி 2024 இல் தொழில்துறை உற்பத்தி 3.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக என புள்ளியல் மற்றும் திட்ட செயல்படுத்தும் அமைச்சகம் (MoSPI) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உற்பத்தி துறையின் வளர்ச்சி ஜனவரி 2024 இல் 3.2 சதவீதமாக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே மாதத்தின் 4.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது சற்று குறைவாகும். மேலும் சுரங்க உற்பத்தி 5.9 சதவீதமும், மின்சார உற்பத்தி 5.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.