அட்டகாசமா இருக்கு.. பாதுகாப்பு, நவீன வசதிகளை அதிகம் விரும்புபவரா? இந்த தாகத்தை 2024 எக்ஸ்யூவி700 தீர்க்கும்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் எக்ஸ்யூவி 700 (XUV700)-ம் அடங்கும். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலின் 2024 வெர்ஷனையே மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
கணிசமான புதுப்பித்தல்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களைப் பெற்ற கார் மாடலாக 2024 எக்ஸ்யூவி 700 காட்சியளிக்கின்றது. இந்த கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்ப்பால் வரும் நாட்களில் இந்த காருக்கு இன்னும் டிமாண்ட் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் ஏற்கனவே வரவேற்பு மிக அமோகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
சென்ற 2021 ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டநிலையில், 1.40 லட்சம் யூனிட் விற்பனையை எக்ஸ்யூவி 700 சமீபத்தில் எட்டியது. இத்தகைய தரமான வரவேற்பைப் பெற்ற கார் மாடலையே மஹிந்திரா நிறுவனம் தற்போது புதுப்பொலிவுடன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
இந்த முறையும் எக்ஸ்யூவி 700 காரின் தலை சிறந்த திறன்களான உலக தரம் வாய்ந்த பாதுகாப்பு வசதிகள், நவீன கால தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை அப்படியே தக்க வைக்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அறிமுகமாக ரூ. 13.99 லட்சம் இந்த காருக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
புதிதாக நெபோலி பிளாக் வண்ண ஆப்ஷனும் 2024 வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. 2024 எக்ஸ்யூவி வெர்ஷனுக்கான புக்கிங் இன்று முதல் தொடங்கி இருக்கின்றது. மேலும், இது வருகின்ற 25 ஆம் தேதி முதல் டீலர் ஷோரூம்களில் காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இதைத்தொடர்ந்தே விரைவில் புக்கிங் செய்தவர்களுக்கு அந்த கார் டெலிவரியும் வழங்கப்படவும் இருக்கின்றது. எக்ஸ்யூவி700 கார் மாடலின் உயர்நிலை தேர்வில் ஏகப்பட்ட புதிய அம்சங்களை வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, ஏஎக்ஸ்7எல் வேரியண்டில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், ஓஆர்விஎம் உடன் இணைக்கப்பட்ட இருக்கை வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அம்சத்தின் ஏற்கனவே பழக்கப்பட்ட டிரைவர்கள் காரில் அமர்ந்து அவர்களுக்கு ஏற்ப இருக்கையை அட்ஜெஸ்ட் செய்தால், அதற்கு ஏற்ப பின் பக்கத்தைக் காண்பிக்கும் கண்ணாடியும் மாறிக் கொள்ளும். ஒவ்வொரு முறையும் இருக்கையுடன் சேர்த்து ஓஆர்விஎம்மை-யும் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
இதுபோன்றும் இன்னும் பல வசதிகளை மஹிந்திரா நிறுவனம் அதன் 2024 வெர்ஷன் எக்ஸ்யூவி500-இல் வழங்கி இருக்கின்றது. புதிதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் நெபோலி பிளாக் நிறம் அதிகம் கவர்ச்சியான தோற்றம் கொண்ட வண்ண ஆப்ஷனாகக் காட்சியளிக்கின்றது. இதன் ரூஃப் கருப்பு நிறத்தாலும், கிரில் கருப்பு மற்றும் குரோம் பூச்சாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
இதேபோல், ஏஎக்ஸ்7 மற்றும் ஏஎக்ஸ்7எல் வேரியண்டில், உட்பக்கத்தில் டார்க குரோம் ஏர் வெண்டுகள் கொண்ட ஏசி துளைகள் வழங்கப்பட்டு இருக்கும். இது அந்த தேர்வின் உட்பக்கத்தை பிரீமியமானதாக காண்பிக்கும் நோக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, ஏஎக்ஸ்7 மற்றும் ஏஎக்ஸ்7எல் தேர்வில் கேப்டைன் இருக்கைகள் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், அட்ரினாக்ஸ் அம்சத்தின் வாயிலாக 83க்கும் மேற்பட்ட இணைப்பு வசதியை மஹிந்திரா வழங்கி இருக்கின்றது. இதில் 13 இணைப்பு அம்சங்கள் புதிதாக வழங்கப்பட்டவை ஆகும். எஃப்ஓடிஏ (firmware over-the-air) வசதியும் இந்த காரில் புதிதாக வழங்கப்பட்டு இருக்கின்றது. மஹிந்திரா வழங்கும் அப்டேட்டுகளை இதன் வாயிலாக உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும்.
மஹிந்திரா காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் கார் திருட்டைத் தவிர்க்கும் விதமாக ரிமோட் ஃபங்க்சன், வெயிக்கிள் நிலையை அறிந்துக் கொள்ளும் வசதி, இருப்பிடத்தை அறிந்துக் கொள்ளும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த வசதிகளை மஹிந்திரா அதன் அட்ரினாக்ஸ் சந்தா திட்டத்தின் வாயிலாக வழங்குகின்றது.
இதேபோல் பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகளும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், மிக முக்கியமான அம்சமாக அடாஸ் சிஸ்டம் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. முந்தைய வெர்ஷனிலும் இந்த அம்சம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.