40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அயோத்தி எப்படியிருந்தது? ஆனந்த விகடனில் அப்போது வெளியான கவர் ஸ்டோரி!
அயோத்தி ராமர் – சீதாமுதலில், ‘அனுமன் காடி’ எனப்படும் கோயிலை தரிசிப்போம். அயோத்தியையே ஆட்சி செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாம் இது. சுவாமி அபய ராமதாஸ் அவர்களால் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் ஒரு சிறிய மலையின் மீது அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கோயில் நாகர்கள் என வழங்கப்படும் சுமார் 500 சாதுக்களால் நிர்வகிக்கப்படுகிறது. யாத்திரிகர்கள் இந்தக் கோயிலுக்கு வரத் தவறுவதில்லை. கோயிலெங்கும் வானரக் கூட்டம் அனுமனுக்குத் துணையாக உள்ளன.
இதற்கு அருகிலேயே பத்து நிமிட நடையில் உள்ளது கனக பவனம். இந்தக் கோயிலின் விஸ்தாரமும் அழகும் சொல்லி முடியாது. ராமர் சீதை லட்சுமணர் விக்ரகங்கள் சலவைக் கற்களால் ஆனவை. வெளிப்புறம் குளத்துடன் கூடிய பெரிய தோட்டமும் உண்டு. இந்தக் கோயில் கைகேயியால் சீதைக்கு சீதனமாக வழங்கப்பட்டதாம். வெளியில் உள்ள தோட்டத்தில்தான் சீதை தோழியருடன் விளையாடுவது வழக்கமாம். இதற்கு அருகிலேயே உள்ள இடம் ஸ்ரீராமர் அவதரித்த புண்ணிய பூமி, இதை, ‘ஸ்ரீராமஜென்ம பூமி’ என அழைக்கிறார்கள். எல்லா நற்குணங்களுக்கும் தர்மங்களுக்கும் இருப்பிடமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பிறந்த புண்ணிய மண்ணில் நின்று கொண்டிருக்கிறோம் என்று நினைத்ததும் உடல் ஒரு கணம் நடுக்கத்துடன் சிலிர்த்தது. இவ்விடத்திலேயே வாழக் கொடுத்து வைத்தவர்கள் எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள்!
விக்ரமாதித்த அரசர் காலத்தில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு மேலே கோயிலும் கட்டப்பட்டதாகச் சொன்னார்கள். இந்தக் கோயிலில் உள்ள தூண்களில் காணப்படும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் சிறப்பு மிக்கவை. இந்த இடம் ரயில் நிலையத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது (அப்போதைய நிலவரம்).முக்கியமான கோயில்களில் வரிசையில் அடுத்ததாக ஸ்ரீமணி ராமதாஸ் சாவணியை குறிப்பிட வேண்டும். ஸ்தாபகர் மணி ராமதாஸ்ஜி மகாராஜாவின் பெயரில் வழங்கப்படுகிறது. 200 ஆண்டு காலப் பழைமை மிக்கது. இங்கு ராம நாமத்தை ஜபிக்க வரும் சாதுக்களுக்கும் ஏழை பக்தர்களுக்கும் தொண்டு புரிவது இந்த நிறுவனத்தின் சிறப்பு அம்சம்.