அயோத்தி விவகாரம்: “போலி இந்துத்துவா குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்!” – பீகார் கல்வியமைச்சர்

உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதியின்படி, அயோத்தியில் 2019-ம் ஆண்டு முதல் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
லோக் சபா தேர்தலுக்கு நான்கு மாதங்களே இருக்கும் சூழலில், ஜனவரி 22-ம் தேதியில் ராமர் கோயில் திறக்கப்படவிருக்கிறது. அதிலும், கட்டுமானப் பணிகள் முழுவதுமாக நிறைவடையாமல் கோயில் திறக்கப்படுவதால், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டது. அதேசமயம், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க முதல்வர்கள் என ஆட்சியிலிருப்பவர்கள் கலந்துகொள்வதால், `மதசார்பற்ற இந்தியாவில், ஒரு குறிப்பிட்ட மத நிகழ்ச்சியைத் தேர்தல் ஆதாயத்துக்காக அரசு நிகழ்ச்சியாகவே பா.ஜ.க அரசு மாற்றியிருக்கிறது’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.
அயோத்தி ராமர் கோயில்
இவ்வாறு, ராமர் கோயில் சுற்றி பேச்சுக்கள் வந்துகொண்டிருக்கும் சூழலில், ராமர் கோயிலுக்கு ஒதுக்கப்பட்ட இடம் சுரண்டலுக்கான இடம் என்றும், கோயில்கள் மன அடிமைத்தனத்தனத்துக்கான பாதை, பள்ளிகளே வாழ்வின் வெளிச்சத்துக்கான பாதை என்றும், பீகார் கல்வியமைச்சர் சந்திரசேகர் (RJD) தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதிகளில் மிக முக்கிய நபரான சாவித்திரி பாய் பூலேவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ரோஹ்தாஸ் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கல்வியமைச்சர் சந்திரசேகர், “ராமர் கோயிலுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பது சுரண்டலுக்கான இடம். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சில சதிகாரர்களின் பாக்கெட்டுகளை நிரப்பும் இடம். எனவே, போலி இந்துத்துவா, போலி தேசியவாதம் பற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கடவுள் ராமர், எல்லா இடங்களிலும், நம் அனைவரிடத்திலும் வாழ்கிறார். அதானால், ராமரைத் தேடி கோயிலுக்கோ, மற்ற இடங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.
பீகார் கல்வியமைச்சர் சந்திரசேகர்
கோயில்கள் என்பவை மன அடிமைத்தனத்துக்கான பாதை. பள்ளிகளே வாழ்க்கையில் வெளிச்சத்துக்கான பாதை. இப்போது அடிபட்டால், எங்கே போவது… கோயிலுக்கா, மருத்துவமனைக்கா… மேலும், உங்களுக்கு கல்வி வேண்டுமென்றாலோ, எம்.எல்.ஏ, எம்.பி ஆகவேண்டுமென்றாலோ கோயிலுக்குச் செல்வீர்களா, பள்ளிக்கு செல்வீர்களா… சாவித்திரி பாய் பூலே கூறியதைத்தான் ஃபதே பகதூர் சிங்கும் கூறியிருந்தார்” என்றார்.
முன்னதாக, சாவித்திரி பாய் பூலே பிறந்தநாள் அன்று (ஜனவரி 3), “கோயில்கள் என்பவை மன அடிமைத்தனத்துக்கான பாதை. பள்ளிகளே வாழ்க்கையில் வெளிச்சத்துக்கான பாதை. கோயிலில் மணி அடிக்கும்போது, நாம் மூடநம்பிக்கை, பாசாங்குத்தனம், முட்டாள்தனம், அறியாமை ஆகியவற்றை நோக்கிச் செல்கிறோம் என்ற செய்தியை அளிக்கிறது.