அயோத்தி ராமருக்கு இஸ்லாமிய கைவினைஞர்களின் உலகின் மிக நீளமான அன்பளிப்பு
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்வு, இந்தியாவின் பாரம்பரியமிக்க ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ராமர் என்பவர் சாதி, மதம் மற்றும் தேச எல்லைகளைக் கடந்து அனைவருக்குமானவர், என்ற பிரச்சாரம் உலகளவில் கவர்ந்துள்ளது. இதனால் உலகின் பல மூலைகளில் இருந்தும் அயோத்தி ராமருக்கு அன்பளிப்புகள் குவிந்து வருகின்றன.
அயோத்தி ராமர் கோயிலுக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளுக்கு மத்தியில் பூட்டு, வாசனை ஊதுபத்தி, லட்டு என எதை எடுத்தாலும் பரிசுகளும் பிரம்மாண்டமாகவே குவிந்து வருகின்றன. அவற்றின் வரிசையில் உலகின் மிக நீளமானது என அதன் தயாரிப்பாளர்களால் வர்ணிக்கப்படும் புல்லாங்குழல் ஒன்றும் பரிசாக சேர இருக்கிறது.
இந்த புல்லாங்குழலை இஸ்லாமிய கைவினைஞர்கள் உருவாக்கியிருப்பது, இதன் பின்னணியில் மேலும் சுவாரசியம் சேர்த்திருக்கிறது. தற்போது அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு காணவிருப்பதில், அவர் அனைவருக்குமானவர் என்பதை சமய வேறுபாடின்றி பல்வேறு மதத்து தலைவர்களும் போற்றி வருகின்றனர் .இந்த வகையில் மெகா அன்பளிப்பு ஒன்று இஸ்லாமிய கைவினைஞர்களில் தரப்பிலிருந்து அயோத்தி ராமருக்கு சேர்ந்துள்ளது.
21.5 அடி நீளத்திலான புல்லாங்குழலை கைவினை கலைஞர்களான ஹினா பர்வீன், ஷம்ஷாத் அஹ்மத், அர்மான் நபி ஆகியோர், தங்களது 10 நாள் உழைப்பில் உருவாக்கி உள்ளனர். வெறுமனே காட்சி அலங்காரத்துக்கு மட்டுமன்றி அதனை வாசிக்கவும் செய்யலாம். இந்த வகையில் செயல்படுத்தக்கூடிய உலகின் நீளமான புல்லாங்குழல் என இதனை வர்ணிக்கிறார்கள். இந்த புல்லாங்குழல், அயோத்தி ராமர் கோயில் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.