கண் திறந்து பார்த்து, புன்னகை செய்யும் அயோத்தி ராமர் சிலை.. பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. கோயிலின் கருவறையில் வைக்கப்பட்டிருந்த ராமர் சிலை, சடங்குகள் பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உ.பி ஆளுநர் ஆனந்திபென் பட்டியல், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் முன்னிலையில் சிலை பிரதிஷ்டை பூஜைகள் செய்யப்பட்டது. இந்த பிரம்மாண்ட விழாவில் முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலின் பால ராமர் சிலை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மெய்சிலிர்க்க வைக்கும் இந்த வீடியோவை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர். மைசூரைச் சேர்ந்த அருண் யோகிராஜ் வடிவமைத்த இந்த சிலை உயிர்பெற்று சுற்றியிருப்பவர்களை பார்த்து புன்னகைப்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறவு தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை பார்த்து பல பயனர்களும் ஜெ ஸ்ரீ ராம் என்ற முழக்கங்களை பதிவிட்டு வருகின்றனர்.
https://twitter.com/tadasunil98/status/1749606652482105679
இதற்கிடையில், இன்று முதல்அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலை 3 மணி முதலே திரளான பக்தர்கள் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமரை தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். காலை 7 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட ராமர் கோயில் 380 அடி நீளமும் (கிழக்கு-மேற்கு) 250 அடி அகலமும் கொண்டது. இது தரையில் இருந்து 161 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகளை கொண்டுள்ளது. கோயிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் இந்து தெய்வங்கள், கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிற்பங்களை இடம்பெற்றுள்ளன. ராமர் கோயிலின் உள் கருவறையில், குழந்தை வடிவில் பால ராமர் வீற்றிருக்கிறார்.