அயோத்தி ராமர் கோவில்… திறப்பு விழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்… !

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் திறப்பு விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
அன்று பிற்பகலில் குழந்தை ராமர் சிலை பிரதமர் மோடியால் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் ஆன்மிகவாதிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக விழாவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாக கோட்ட ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கோட்ட ஆணையர் கவுரவ் தயாள் ” விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன, கோயிலுக்குள் விழாவிற்கான இருக்கை திட்டங்கள் இறுதி செய்யப்படு வருகின்றன. இந்தியா முழுவதும் இருந்து மொத்தம் 7500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர் . வாகனங்களைப் பயன்படுத்தி மைதானத்திற்குள் விஐபிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கும்பாபிஷேக தினத்தில் அந்தந்த கிராமங்கள், உள்ளாட்சிகள், கோயில்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராம பக்தர்களைக் கூட்டி பஜனை கீர்த்தனை செய்யுங்கள். கும்பாபிஷேக விழாவை டிவி அல்லது எல்இடி மூலம் காட்டுங்கள். வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு பஜனை-கீர்த்தனை-வழிபாடு செய்யுங்கள். வீடுகளில் விளக்குகள் ஏற்றுங்கள். 500 ஆண்டுகளுக்கு பிறகு புனிதமான தருணம் மீண்டும் வந்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.