1000 ஆண்டுகளுக்கு அயோத்தி ராமர் கோவிலின் உறுதித் தன்மை நீடிக்கும்.. தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆச்சர்யம்… !

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் கும்பாபிஷேகம், கருவறையில் சிலை நிர்மாணம் என முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
அடுத்த நாளான ஜனவரி 23 முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறக்கட்டளை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் மோசமான நிலநடுக்கங்கள், பெருவெள்ளங்களால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தாங்கக்கூடிய வல்லமையுடன் அமைக்கப்பட்டுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்
. டாடா கன்சல்டிங் இஞ்சினியரஸ் லிமிடெட்டும் லார்சன் அண்டு டூப்ரோவும் இணைந்து சிறப்பாகத் திட்டமிட்டு நவீன கட்டடத் தொழில்நுட்பத்தால் இந்த கோயில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆன 360 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவில் முழுவதுமே நவீன இரும்பு, எஃகு அல்லது சிமெண்ட் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தைத் தாக்குப்பிடிப்பதற்காக கருங்கல்லைக் கொண்டே கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கருங்கல்லின் ஆயுட்காலம் அதிகமாகும். 15 மீட்டர் தடிமனான காம்பாக்டடு கான்கிரீட் கொண்டு ஒரு படிவம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 56 அடுக்கு காம்பாக்டடு கான்கிரீட் உடன் ஃப்ளை ஆஷ், தூசு, கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பிரம்மாண்டமான அடித்தளம் 21 அடி கிரானைட் கல்லால் ஆனது. மழை ,குளிர், பனி என்ற எந்த ஈரப்பதமும் கோயிலை பாதிக்காது. அதே போல் அடித்தளம் 18 டிகிரி செல்சியசுக்குக் கீழே வெப்பநிலை இருக்கும்படி அடித்தளம் உயர் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்தப் பணியில் 150 பொறியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த கோவிலை பொறுத்தவரை அடுத்த 1000 ஆண்டுகள் உறுதி தன்மை உடையது. 6.5ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது.