மத்திய பட்ஜெட்டில் இடம்பிடித்த அயோத்தி ராமர் கோயில்! நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?
மக்களவைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் உரையில், சூரியசக்தி உற்பத்தி செய்யும் சோலார் தகடுகளை நிறுவும் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அப்போது, கடந்த ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா விழாவிற்குப் பிறகு சோலார் பேனல் குறித்து பிரதமர் மோடி எடுத்த எடுத்த தீர்மானத்தைச் நினைவுகூர்ந்தார்.
அயோத்தியில் இருந்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, “உலகின் அனைத்து பக்தர்களும் சூரிய வம்சத்தைச் சேர்ந்த பகவான் ஸ்ரீ ராமரின் ஒளியிலிருந்து ஆற்றல் பெறுகிறார்கள் என்பதை உணர்ந்து சோலார் பேனல் திட்டத்தை செயல்படுத்த முடிவ செய்தார் என்று அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டார்.
“அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு இதுதான். ஒரு கோடி வீடுகளில் சோலார் பேனல் அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் ‘பிரதமரின் சூர்யோதயா திட்டம்’ தொடங்கப்படும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணத்தைக் குறைக்கும். மேலும் எரிசக்தித் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்யும்” என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆறாவது முறையாக பட்ஜெட் உரையை ஆற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பதன் மூலம், ஒரு கோடி குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற இயலும். அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் பிரதமர் மோடி எடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” எனக் கூறினார்.
இந்தத் திட்டம் குடும்பங்களுக்குச் சேமிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தொழில் முனைவோருக்கும் பயன்படும் என்றும் அதன் மூலம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் எனவும் நிதியமைச்சர் கூறினார். இலவச சோலார் மின்சாரம் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.18,000 வரை சேமிக்கலாம் என்றும் உபரி மின்சாரத்தை விநியோக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம் என்றும் கூறினார்.
மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதை எளிதாக்கப்படும் என்றும் அதன் மூலம் தொழில் முனைவோருக்கு உபகரணங்கள் வழங்கல் மற்றும் இன்ஸ்டலேஷன் பணிகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உற்பத்தி, இன்ஸ்டலேஷன் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.