அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: இந்தியா முழுவதும் கிராமங்களில் திரைகட்டி நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டம்!

இம்மாதம் 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகமும், கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழாவும் நடைபெற உள்ளது.
இந்த விழாவை நாட்டு மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல கிராமங்களில் அகன்ற திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ஜன.22-ம் தேதி கும்பாபிஷேகமும், கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரிதிஷ்டை செய்யப்படும் விழாவும் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச மாநில அரசு தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது.
கும்பாபிஷேக விழாவிற்கான வேதசடங்குகள் ஜனவரி 16 அன்று தொடங்குகிறது. வாரணாசியைச் சேர்ந்த லக்ஷ்மி காந்த் தீட்சித், ஜனவரி 22-ம் தேதி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவின் முக்கிய சடங்குகளைச் செய்வார். ஜனவரி 14 முதல் ஜனவரி 22-ம் தேதி வரை அயோத்தியில் அமிர்த மஹோத்சவ் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக கிராமங்கள் தோறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நேரடியாக ஒளிபரப்ப செய்ய பெரிய திரைகள் அமைக்க தொண்டர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை சாதாரண மக்கள் காண வழிவகை செய்வதே இதன் நோக்கமாகும். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 6 கோடி பேரை பாஜக தேர்வு செய்துள்ளது. அவர்கள் ஒவ்வொரு எம்.பி தொகுதிகளிலும் உள்ள பூத் கமிட்டியினருடன் ஆலோசனை செய்து அயோத்தி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகளை செய்ய தொடங்கி உள்ளனர்.
அயோத்தியில் விழா நடைபெறும் அதே சமயத்தில் தங்கள் ஊர்களில் இருந்தபடியே கிராம மக்கள் அந்த விழாவை கண்டுகளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.