அயோத்தி ராமர் கோயில் திறப்பு: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கொண்டாட்டம்!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சரியாக நண்பகல் 12.30 மணியளவில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். மேலும், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது. அதுதவிர, பல்வேறு இந்திய தூதரகங்களிலும் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய புலம்பெயர்ந்தோர் ஒன்றுகூடி, பாரம்பரிய உடைகளை அணிந்து, நடனம், பஜனை மற்றும் பிற பக்தி பாடல்களை பாடிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள திரைகளில், ராமர் படங்கள் திரையிடப்பட்டன. பலரும் கைகளில் ராமர் படம் பொறித்த காவிக்கொடிகளை அசைத்தும், லட்டு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கியும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு, கண்கவர் கொண்டாட்டத்துடன் டைம்ஸ் சதுக்கத்தை இந்திய புலம்பெயர்ந்தோர் ஒளிரச் செய்தனர் என நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து, பஜனைகள் மற்றும் பாடல்களைப் பாடினர், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், துடிப்பு மற்றும் ஒற்றுமையை அவர்கள் வெளிப்படுத்தினர் எனவும் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அமைப்பைச் சேர்ந்த பிரேம் பண்டாரி கூறுகையில், ராமர் கோயில் திறப்பு அமெரிக்காவில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது என்றார். மேலும், இந்த நிகழ்வில் அனைத்து மக்களையும் இணைத்ததற்காக பிரதமர் மோடியை அவர் பாராட்டினார்.