அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் | லட்டு விநியோகம் முதல் குழந்தை ராமர் பிரதிஷ்டை வரை: ஜன.22-ல் என்னென்ன ஸ்பெஷல்?
அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர். இதனிடையே, ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான தேதியாக ஜனவரி 22 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 22 ஏன்?: இந்து புராணங்களின்படி, அபிஜித் முகூர்த்தம், மிருகசீரிஷ நட்சத்திரம், அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகா ஆகியவற்றின் சங்கமத்தின் போது ராமர் பிறந்தார் என்று சொல்லப்படுவதுண்டு. இந்த நேரங்கள், ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு மீண்டும் வருவதால், அன்றைய தினத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அபிஜித் முகூர்த்தம்: வேதங்களின்படி, அபிஜித் முகூர்த்தம் என்பது ஒரு நாளின் மிகவும் மங்களகரமான மற்றும் சக்திவாய்ந்த நேரம். அபிஜித் முகூர்த்தம் தினமும் வருவது தான். அதாவது சூரிய உதயத்துக்கு முன்பு வரும் பிரம்ம முகூர்த்தத்தை போல, சூரிய உதயம் ஆன பின்பு சரியாக ஆறு மணி நேரம் கழித்து வருவது. எளிதாக சொல்வதென்றால், நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை உள்ள காலமே அபிஜித் முகூர்த்தம் எனச் சொல்லப்படுகிறது.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள ஜனவரி 22-ம் தேதி அன்று அபிஜித் முகூர்த்தமானது மதியம் 12:16 மணிக்குத் தொடங்கி மதியம் 12:59 மணிக்கு முடிவடையும். அபிஜித் முகூர்த்த நேரத்தில் சிவபெருமான் திரிபுரசுரன் என்ற அரக்கனை வதம் செய்ததால் இந்துக்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக கருதப்படுகிறது. இந்து புராணங்களின்படி, இந்த காலம் ஒருவரது வாழ்க்கையிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை நீக்குகிறது.
மிருகசீரிஷ (மிருகசீரிடம்) நட்சத்திரம்: மிருகசீரிஷம் என்பது ஜோதிடத்தின்படி 27 நட்சத்திரங்களில் ஐந்தாவது நட்சத்திரமாகும். மிருகசீர்ஷா என்பதன் பொருள் மான் தலை ஆகும். இந்த நட்சத்திரம் ஓரியானிஸ் விண்மீனைக் குறிக்கிறது. மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள், கவர்ச்சிகரமானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலிகள். இந்த நட்சத்திரத்தில் தான் கடவுள் ராமர் பிறந்தார் என வரலாறு கூறுகிறது. ஜனவரி 22 அன்று மிருகசீரிஷ நட்சத்திரம் அதிகாலை 03:52 மணிக்குத் தொடங்கி, மறுநாள் அதாவது ஜனவரி 23 அன்று காலை 07:13 மணி வரை தொடரும்.
அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம்: கிழமையையும், நட்சத்திரத்தையும் இணைத்து இந்த யோகங்களை கணிப்பது உண்டு. அதன்படி, மிருகசீரிஷா மற்றும் திங்கட்கிழமை (ஜனவரி 22) இணைந்து அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் ஆகியவை ஜனவரி 22 காலை 07:13 மணிக்கு தொடங்கி மறுநாள் ஜனவரி 23 அதிகாலை 04:58 வரை தொடரும் என்பதால் அன்றைய நாளில் கும்பாபிஷேகம் செய்யப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.