ஹனிமூனுக்கு அயோத்தி கோயில் ட்ரிப்… கடுப்பில் விவாகரத்து கோரிய மனைவி… நடந்தது என்ன?
தேனிலவுக்கு கோவாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கும் வாரணாசிக்கும் அழைத்துச் சென்றதால் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார் போபாலைச் சேர்ந்த ஒரு பெண்.
விவாகரத்துக்கு இதுவும் ஒரு காரணமா என்று நீங்கள் யோசிக்கலாம். தேனிலவுக்கு கோவாவுக்கு அழைத்துச் செல்வதாகத் தன் கணவர் உறுதியளித்ததாகவும், நேரம் வந்ததும் தன்னை அயோத்தி மற்றும் வாரணாசிக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறுகிறார். இந்தப் பெண் மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் உள்ள பிப்லானி பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. தற்போது இந்த விஷயம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவா என்று கூறி அயோத்திக்கு அழைத்துச் சென்றார் கணவர்:
அந்தப் பெண் தனது விவாகரத்து மனுவில், தனது கணவர் ஐடி துறையில் வேலை பார்த்து நன்றாக சம்பாதிப்பதாகவும் தானும் நன்றாக ஊதியம் பெறுவதாகவும் கூறியுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தேனிலவுக்கு வெளிநாடு செல்வது பெரிய விஷயமல்ல. இருந்த போதிலும், பெண்ணின் கணவர் அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்து, கோவா அல்லது தென்னிந்தியாவிற்கு உள்நாட்டு சுற்றுலா செல்வோம் என்று கூறியுள்ளாராம். பின்னர், தனது கணவர் அயோத்தி மற்றும் வாரணாசிக்கு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளார். இந்த விஷயத்தை ஒரு நாள் முன்புதான் மனைவியிடம் கூறியதாக தெரிகிறது.
விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது:
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன் தனது தாய் அயோத்தி செல்ல விரும்புவதாக கணவர் கூறியதாகவும், அதனால் அயோத்தி அழைத்துச் செல்லப்பட்டதாக அப்பெண் கூறியுள்ளார். அந்த பெண் சுற்றுலாவில் இருந்த அனைத்து நாட்களிலும் யாரிடமும் எதுவும் பேசவில்லை என்றும், தான் திரும்பியவுடன், குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.