திருப்பதியை ஓரம் கட்டுமா அயோத்தி..? கொட்டும் பணம்.. ராமர் கோயிலால் குவியப்போகும் கோடிகள்..!
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட கால காத்திருப்புக்குப் பின்னர், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கோயில் கட்டப்பட்டு அங்கு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் பால ராமர் கோயிலுக்கு பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டில், அயோத்தி பகுதியிலிருந்து சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரியாக மட்டும் கிடைக்கும் என எஸ்பிஐ வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது, மேலும் அம்மாநிலத்திற்கு சுற்றுலா மூலமாக ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில், மெக்கா மற்றும் வாடிகன் நகரை அயோத்தி முந்திவிடும் என வெளிநாட்டு பங்குச் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஜெஃப்ரிஸ் கூறியுள்ளது. அயோத்திக்கு ஆண்டுதோறும் 5 கோடி பார்வையாளர்கள் வருகை தருவார்கள் எனவும் ஜெஃப்ரிஸ் தெரிவித்துள்ளது. இது உத்தரபிரதேசத்தில் மட்டுமல்லாமல், நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும். இதன் மூலம் ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் வளர்ச்சி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலுக்கு ஆண்டு தோறும் இரண்டரை கோடி பேர் பயணம் மேற்கொள்கின்றனர். இதன்மூலம், அக்கோயில் ஆண்டுக்கு ரூ.1, 200 கோடி வருவாய் ஈட்டுகிறது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு 80 லட்சம் பக்தர்கள் செல்கின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. இதேபோல், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலும் சுற்றுலா மூலம் வருடந்தோறும் ரூ.100 கோடி வருமானம் பார்க்கிறது. சர்வதேச அளவில், இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிற்கு ஆண்டுதோறும் 2 கோடி பேர் செல்கின்றனர். இதனால், சவுதி அரேபியாவிற்கு, ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. வாடிகன் நகரம் சுற்றுலா பயணிகள் மூலம் ரூ.2,600 கோடி வருவாய் ஈட்டுகிறது.
பால ராமர் கோயில் திறப்புக்கு பின், அயோத்திக்கு நாள் தோறும் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்றும் இந்த எண்ணிக்கை விரைவில் 3 லட்சமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே அந்நகரத்திற்கு மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அயோத்திக்கு செல்லும் பக்தர்கள் மதுரா மற்றும் வாரணாசிக்கும் செல்லக் கூடும் என்பதால் அப்பகுதிகளிலும் வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. போக்குவரத்து, ஹோட்டல் வணிகம், உள்நாட்டுப் பொருட்கள் உற்பத்தி ஆகியவையும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சுற்றுலாவை மையமாகக் கொண்டு அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளன. அதேபோல், உத்தர பிரதேசத்தின் வளர்ச்சியும் இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்