பகீர் கிளப்பும் ரகுராம் ராஜன்.. தைவான்-சீனா விவகாரம், உலகப் போர் வெடிக்குமா..?!
ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – காசா, சமீபத்தில் துவங்கிய செங்கடல் தாக்குதல் ஆகியவற்றுக்கு மத்தியில் புதிதாக ஒரு பிரச்சனை வெடிக்கப்போவதாக முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தைவான் நாட்டின் மீது சீனா முக்கிய நகர்வை மேற்கொள்ளும், இதன் மூலம் மேற்கத்திய நாடுகள் கடுமையாகச் சீனா மீது ரியாக்ட் செய்ய வாய்ப்பு உள்ளதாக முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜன் தான் எழுதிய Breaking The Mould என்ற புத்தகத்தை ப்ரோமோட் செய்ய இந்தியா வந்திருக்கும் நிலையில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், இப்போது ராஜ் ஷாமணி மீண்டும் உலகப் போர் வருமா என்ற கேள்வியை முன்வைத்தார்.
இதற்கு ரகுராம் ராஜன், உலகப் போர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை, ஆனால் சீனா நாடு தைவான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாலும், இதற்கு மேற்கத்திய நாடுகள் பெரிய அளவில் ரியாக்ட் செய்யும். எனவே நாம் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என ராஜ் ஷாமணி உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசினார்.
தைவான் தனி நாடாக இயங்கி வரும் வேளையில், சீன அரசு தைவான் மெயின்லேண்ட் சீனா-வின் ஒருபகுதி தான் தைவான் எனக் கூறி வருகிறது. ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின்பு சீனா, தைவான் மீது தாக்குதல் நடத்தும் என நம்பப்பட்டது.
ரகுராம் ராஜன் இந்தப் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் மேலும் பேசுகையில், “சீனா, தைவான் மீது தாக்குதல் நடத்துமா என, என்னுடைய சீன நண்பர்களைக் கேட்டேன். இதற்கு அவர்கள் இல்லை, இல்லை எனவும், ஆனால் யாருக்கு தெரியும்.. எங்கள் நாட்டுத் தலைவர் எண்ணம் என்னவென்று யாருக்கும் தெரியாது என அவர்கள் கூறியதாக ராஜன் தெரிவித்தார். இதேவேளையில் தான் சீன அதிபர் கடந்த ஆண்டு அந்நாட்டுச் சட்டதிட்டங்களை மாற்றி மீண்டும் அவரே 3வது முறையாக அந்நாட்டின் அதிபராகப் பதவியேற்றார். இவருடைய 3வது ஆட்சிக் காலத்தில் பெரிய மாற்றத்தைச் சீன அரசும், சீன பொருளாதாரம் எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போரில், சீனா ரஷ்யாவுக்குப் பெரிய அளவில் உதவியுள்ளதாகக் கூறப்படும் வேளையில் சீன உலக நாடுகளிடம் இருந்து அதிகப்படியான எதிர்ப்புகளைச் சந்தித்தது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் சீனா, தைவான் நாட்டைத் தாக்கினால் ரஷ்யா, சீனாவுக்கு ஆதரவாக வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.