Bajaj Pulsar 2024: பல்சர் பைக் பிரியர்களுக்கு குட்நியூஸ் : அசத்தலான அம்சங்களுடன் பல்சர் NS200 அறிமுகம் செய்த பஜாஜ்!

தொடர்ந்து பல வருடங்களாக இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த பல்சர் பைக் சீரிஸில், புதிதாக இந்த ஆண்டு பல மாற்றங்களுடன் பல்சர் NS200 பைக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதனையொட்டி வாடிக்கையாளர்களிடம் ஆர்வத்தை அதிகப்படுத்த இந்த பைக் குறித்த டீஸர்களை வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீஸரைப் பார்த்த பலருமே, பைக்கில் என்னவிதமான புதிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

இதுவரை இந்த பைக் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவல்களையும் பஜாஜ் நிறுவனம் கொடுத்திருக்காவிட்டாலும், NS200 பைக்கில் பல புதிய அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் வீடியோ முலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் பைக்கில் என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

2024 பஜாஜ் பல்சர் NS200 பைக்கில் புதிய LED ஹெட்லைட் :

டீஸரில் காணப்படும் காட்சியை வைத்து பார்க்கும்போது 2024 பல்சர் NS200 பைக்கில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட LED ஹெட்லைட் உள்ளது. புதிய க்ளஸ்டருடன் கூடிய கூர்மையான டிஸைனில் இந்த LED லைட் உள்ளது. முக்கியமாக மின்னல் போல் ஒளிரும் LED DRL எந்தவித தங்குதடையின்றி அழகாக ஹெட்லைட்டோடு பொருந்துகின்றன. புதிய NS200 பைக் முற்றிலும் LED செட்டப்பிற்கு மாறியுள்ளதா அல்லது பழைய மாதிரியே ஹாலஜன் விளக்குதான் உள்ளதா என்பதை இப்போதைக்கு உறுதியாக கூற முடியவில்லை. கூடுதலாக மற்றவர்களின் பார்வைக்கு எளிதாக தெரியக் கூடிய வகையில் ஸ்டைலான LED இண்டிகேட்டர் உள்ளது.

டிஜிட்டல் டாஷ்போர்டு :

பல்சர் N150 மற்றும் பல்சர் N160 பைக்கை பின்தொடர்ந்து, அதேப்போன்ற தொழில்நுட்ப அப்கிரேடுகள் பல்சர் NS200 பைக்கிலும் செய்யப்பட்டுள்ளது. பஜாஜின் N-சீரிஸ் பைக்குகளில் தற்போது அடிப்படை அம்சமாக உள்ள டிஜிட்டல் டாஷ்போர்டு முதல்முறையாக பல்சர் NS200 பைக்கிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த வசதியின் மூலம் பைக் ரைடர்களால் முக்கியமான தகவல்களை எளிதாக பெற முடிகிறது. இதுதவிர பைக் ஓட்டும் அனுபவத்தை அதிகப்படுத்த ரிவைஸ்டு ஸ்விட்ச் கியர் வசதியும் கொண்டு வரப்படவுள்ளது.

டிஸைன் அப்கிரேடு :

இன்ஸ்டாகிராமில் வெளியான டீஸரை வைத்து பார்க்கும்போது NS200 பைக்கின் புகழ்பெற்ற டிஸைனில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றே தோன்றுகிறது. பார்ப்பதற்கு பெரிதாக இருக்கும் பெட்ரோல் டேங்க், ஸ்பிளிட் இருக்கை, ஆக்ரோஷமான தோற்றம் போன்றவைதான் பல்சர் NS200 பைக்கின் தனித்துவ அடையாளமாகும். ஆகையால் இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லைட்டிங் தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எர்கோனோமிக்ஸ் போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளதால், பெர்ஃபார்மன்ஸ் மற்றும் ஸ்டைலை விரும்பும் ரைடர்களுக்கு ஒருசேர அமைந்த முழுமையான பேக்கேஜாக புதிய பல்சர் NS200 பைக் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *