CNG பைக் அறிமுகம் செய்யும் பஜாஜ்.. மைலேஜ் பிச்சிக்கும்..!!
பஜாஜ் ஆட்டோ சுத்தமான எரிபொருள் சிஎன்ஜி பைக்குகள் அடங்கிய புதிய போர்ட்ஃபோலியோவை உருவாக்கி வருகிறது. முதல் சிஎன்ஜி பைக் ஜூன் மாதம் சந்தைக்கு வரும் என்று பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்த பைக் சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும். ஜூன் மாதம் சாலைகளில் அறிமுகமாகி கலக்கபோகிறது, இதன் மூலம் இனி அதிக பணம் கொடுத்து பெட்ரோல் வாங்கும் தொல்லை இல்லை. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் செலவழிக்கப்படும் என்று பஜாஜ் குழுமத்தின் உறுதிமொழியை அறிவிக்கும் போது கூறினார்.
மைலேஜ் முக்கியம் பாஸ்: மைலேஜ் மீது குறியாக இருக்கும் மக்களுக்காகவே இந்த புதிய சிஎன்ஜி பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது, இது வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்படும் நிலையில் இந்திய சாலைக்கு வரும் முதல் சிஎன்ஜி பைக் ஆக இது இருக்கும்.
பஜாஜ் சிஎன்ஜி பைக் விலை: வாடிக்கையாளர்களுக்கு வசதியாக பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் விருப்பங்களை வழங்குவதற்கான சிறப்பு டேங்கைக் கொண்டிருப்பதுடன், உற்பத்திச் செலவு அதிகமாக இருப்பதால், சிஎன்ஜி பைக்குகளின் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் விரைவில் 2 மில்லியன் யூனிட்களை எட்டும் என்றும் பஜாஜ் கூறினார். இதற்கிடையில், பஜாஜ் குழுமம் அதன் அனைத்து சிஎஸ்ஆர் மற்றும் தொண்டு திட்டங்களுக்கும் குழுவின் புதிய அடையாளமான ‘பஜாஜ் பியாண்ட்’ (Bajaj Beyond) திட்டத்தின்கீழ் திறன் மேம்பாட்டின் மீது கவனம் செலுத்தி, 5 ஆண்டுகளில் சமூக தாக்க முயற்சிகளுக்கு 5,000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
இதன் மூலம் நாளைய இளைஞர்களில் 2 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவதோடு, இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் வழங்கப்படும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சமூகப் பொறுப்பு என்பது பஜாஜ் குடும்பத்தின் தொழில்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாக அதன் அறக்கொடை முயற்சிகளில் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், பஜாஜ் குழுமம், திறன் மற்றும் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், தண்ணீர் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சிஎஸ்ஆர் முயற்சிகளுக்கு கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் பங்களித்துள்ளது என்று பஜாஜ் ஆட்டோ தலைவர் நிராஜ் பஜாஜ் கூறினார்.
பஜாஜ் குழுமத்தின் மனிதாபிமான முயற்சிகள் ஜம்னாலால் பஜாஜ் அறக்கட்டளை, ஜான்கிதேவி பஜாஜ் கிராம் விகாஸ் சன்ஸ்தா, கமல்நாயன் பஜாஜ் மருத்துவமனை போன்றவை சமூகங்களை மேம்படுத்தவும், அதிகாரமளிக்கவும் இடைவிடாது உழைத்துள்ளன என்றார். அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு செழிப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு குழு உறுதியாக உள்ளது.
பஜாஜ் குழும நிறுவனங்களில் பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் முகந்த் லிமிடெட் ஆகியவை அடங்கும்.
கடந்த ஆண்டு பஜாஜ் இன்ஜினியரிங் திறன் பயிற்சி என்ற பஜாஜ் இன்ஜினியரிங் ஸ்கில் டிரெய்னிங்கை அறிமுகப்படுத்தியது ஒரு மதிப்புமிக்க கற்றல் அனுபவமாக உள்ளது.