Bajra Paniyaram : இந்த பனியாரத்த செஞ்சு குடுங்க உங்க குழந்தைகளுக்கு, ஆரோக்கியம் 100 சதவீதம் உறுதி!
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி -ஒரு கப்
பச்சரிசி – அரை கப்
கம்பு – ஒரு கப்
கருப்பு உளுந்து – அரை கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – பனியாரம் பொரிக்க தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை, மல்லித்தழை – கைப்பிடியளவு
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
கடலை பருப்பு – அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கம்பு சேர்த்து தண்ணீரில் மூன்று முறை கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் கருப்பு உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து கழுவி சிறிது தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் கிரைண்டரில் ஊறவைத்த உளுந்தை சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக பொங்கும் வரை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதோடு ஊறவைத்த அரிசி கம்பை சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
அரைத்த மாவை பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கைகளால் கலந்து மூடி வைக்கவேண்டும்.
எட்டு மணி நேரம் மாவை புளிக்க வைக்கவேண்டும். பின்னர் மீண்டும் ஒருமுறை கலந்து கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, பொன்னிறமானவுடன், கறிவேப்பிலை, மல்லி சேர்த்து, பொரிந்தவுடன், அதில் பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி, தேங்காய் துருவல் தூவி இறக்க வேண்டும். அதை மாவில் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
பனியார சட்டியை மிதமான சூட்டில் காயவைத்து உங்களது விருப்பம்போல பனியாரங்களை ஊற்றி எடுக்க வேண்டும். இதை அப்படியே தோசைக்கல்லில் தோசையாகவும் ஊற்றி எடுக்கலாம்.
தோசைபோல கனமாகவோ அல்லது முறுகல் தோசை போல மெலிதாகவோ விட்டு நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சிவந்து வரும் வரை வேகவைத்து எடுக்கவேண்டும்.
ஆரோக்கியமான கம்பு பனியாரம் மற்றும் தோசை தயார்.
வெங்காயம், தக்காளி, தேங்காய், புதினா, மல்லி என எந்த சட்னியுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம். சாம்பார் அல்லது குருமாவும் இதற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.