பாலா என்னை அடிக்கவில்லை … மமிதா பைஜு விளக்கம்!
வணங்கான் படத்தில் நடித்த போது பாலா திட்டினார், அடித்தார், அதனால் படத்திலிருந்து விலகினேன் என்று பேட்டியளித்த நடிகை மமிதா பைஜு, பாலா என்னை அடிக்கவில்லை என்று பிளேட்டை திருப்பிப் போட்டிருக்கிறார்.
மமிதா பைஜு மலையாளத்தின் வளர்ந்து வரும் நடிகை. இவர் நாயகியாக நடித்த பிரேமலு திரைப்படம் உலக அளவில் 75 கோடிகளைக் கடந்து வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் 100 கோடி கிளப்பில் படம் இணைய உள்ளது. இவர், பாலாவின் வணங்கான் படத்தில் வில்லடிச்சான் மாடன் பெண் கலைஞர் வேடத்தில் நடித்தார். படப்பிடிப்பின் போது பாலா திட்டி, அடித்ததால் படத்திலிருந்து விலகினார். அந்த சம்பவத்தையும் அவரே விளக்கியிருந்தார்.
வணங்கானில் மமிதாவுக்கு வில்லடிச்சான் மாடன் பெண் கலைஞர் வேடம். அந்த கலைவடிவத்தில் சரியான பயிற்சி அளிக்காமல் பாலா டேக்கிற்கு செல்ல, மூன்றுமுறை ரீடேக் எடுக்கும்படி ஆகியிருக்கிறது. அந்த நேரத்தில் பாலா அவரை திட்டியதுடன், பின்பக்கம் நின்று தோளில் அடிக்கவும் செய்துள்ளார். இதனை மலையாள மீடியாவுக்கு அளித்த வீடியோ இன்டர்வியூவில், தனது கையால் தோளை அடித்துக் காட்டி பேசியிருந்தார் மமிதா. இந்தச் செய்தி வைரலான நிலையில், இப்போது பழியை பேட்டி எடுத்தவர் மீது சுமத்தியுள்ளார்.
“நான் பேசியதை திரித்து கூறிவிட்டார்கள். ப்ரீ புரொடக்ஷனில் இருந்து, புரொடக்ஷன்வரை பாலா சாருடன் கிட்டத்தட்ட ஒரு வருடம் பயணித்தேன். அவர் என்னிடம் எப்போதும் கனிவாக நடந்து கொண்டதுடன், ஒரு நல்ல நடிகையாவதற்கு எனக்கு உதவி செய்தார். மனதளவிலோ, உடலளவிலோ மற்ற எந்த விதத்திலோ அந்தப் படத்தின் போது எந்த முறைகேடுக்கும் நான் உள்ளாகவில்லை. வேறு காரணங்களுக்காகவே நான் அந்தப் படத்திலிருந்து விலகினேன்” என்று விளக்கமளித்துள்ளார்.
மலையாள மீடியாவுக்கு அளித்தப் பேட்டி தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று மமிதா பைஜு உண்மையை பேசியிருக்கலாம். தமிழ்நாட்டில் அது வைரலானதும் இப்போது மாற்றிப் பேசியுள்ளார். அவர் சொல்வதில் எது நிஜம் என்பதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. சில தமிழ் மீடியாக்களும் அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றன.