பலேனோ… கிராண்ட் விடாரா… பல கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ள மாருதி சுசூகி!
மாருதி சுசூகி நிறுவனம் தங்களது நெக்ஸா ரேஞ்சில் உள்ள பயணிகள் வாகனங்களுக்கு ரூ.87,000 வரையில் தள்ளுபடி வழங்கவுள்ளது. இதில் அதிகபட்சமாக மாருதி சுசூகியின் கிராண்ட் விடாராவிற்கு ரூ.87,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதுதவிர நெக்ஸா ரீடெய்ல் மூலம் விற்பனையாகும் இக்னிஸ், பலேனோ, சியாஸ், ஜிம்னி மற்றும் XL6 கார்களுக்கும் இந்த மாதத்தில் தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது மாருதி.
மாருதி சுசூகியின் கிரண்ட் விடாராவிற்கு ரூ.30,000 கேஷ் தள்ளுபடியாகவும் அதோடு சேர்த்து ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் தரப்படுகிறது. மேலும் இந்த SUV கார்ரை வாங்கும் வாடிக்கையாளருக்கு கார்ப்பரேட் சலுகையாக ரூ.7,000 வரை தரப்படுகிறது. எனினும் இந்தக் காரின் சிஎன்ஜி வெர்ஷனுக்கு எந்த தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்படவில்லை.
மாருதி சுசூகியின் பலேனோவிற்கு ரூ.57,000 வரையில் சலுகை கிடைக்கிறது. ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரான இதற்கு ரூ.35,000 கேஷ் தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் கிடைக்கிறது. இதுதவிர தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு கார்ப்பரேட் சலுகையாக ரூ.7,000 வரையில் வழங்கப்படுகிறது. அதேப்போல் பலேனோவின் சிஎன்ஜி வெர்ஷனுக்கும் ரூ.25,000 தள்ளுபடி தரப்படுகிறது. இதில் ரூ.10,000 கேஷ் தள்ளுபடியாகவும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போன்ஸாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
இக்னிஸ் (IGNIS) காருக்கு ரூ.62,000 வரையில் தள்ளுபடி வழங்குகிறது மாருதி சுசூகி நிறுவனம். இதில் கேஷ் தள்ளுபடியாக ரூ.40,000 வரையிலும் எக்ஸ்சேஞ்ச் போன்ஸாக ரூ.15,000 வரையிலும் தரப்படுகிறது. இந்தக் காருக்கு கார்ப்பரேட் சலுகையாக ரூ.7,000 வரையில் கிடைக்கிறது. பலேனோ அடிப்படையில் அமைந்த க்ராஸ் ஓவர் கார்களான ஃப்ரான்ஸ் மற்றும் XL6 MPV கார்களுக்கு முறையே ரூ.27,000 மற்றும் ரூ.20,000 தள்ளுபடியாக கிடைக்கிறது.
மாருதி சுசூகியின் ஒரே மிட் சைஸ் செடான் வகை காரான சியாஸிற்கு (CIAZ) ரூ.60,000 வரையில் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் கேஷ் தள்ளுபடியாக ரூ.25,000, எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.25,000 மற்றும் கார்ப்பரேட் சலுகையாக ரூ.10,000 வரை வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.
பெரிய எதிர்பார்ப்புகளோடு அறிமுகம் செய்யப்பட்ட SUV காரான மாருதி சுசூகியின் ஜிம்னி வாகனத்தின் விற்பனை இன்று வரை எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றே சொல்ல வேண்டும். 2023-ம் ஆண்டு அறிமுகமான இந்தக் காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் இறங்குமுகத்தில் உள்ளது. இதன் விற்பனையை அதிகப்படுத்த மாருதி நிறுவனமும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜிம்னி காருக்கு ரூ.53,000 வரையில் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இந்தக் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50,000 வரை கேஷ் தள்ளுபடியாகவும் ரூ.3,000 வரையில் கார்ப்பரேட் சலுகையாகவும் கிடைக்கிறது.