அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்து செல்ல தடையா ? அமைச்சரின் பதில்..!
தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது இறைச்சி உணவகத்திற்கு மாட்டிறைச்சியை அரூர் செல்லும் அரசு பேருந்தில் கொண்டு சென்றுள்ளார். இடையில் கவனித்த நடத்துனர் என்ன எடுத்து செல்கிறீர்கள் ? என்று கேட்டு மாட்டு இறைச்சி என்பதை அறிந்து உடனே பேருந்து நிறுத்தி அங்கேயே அந்த பெண்ணை இறக்கிவிட்டு சென்றுள்ளார். அருகில் பேருந்து நிறுத்தம் கூட இல்லாமல் நடுவழியில் அவரை நிறுத்தி சென்றது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட உடன் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் இவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவம் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் போக்குவரத்து துறை அமைச்சரிடம் அரசு பேருந்தில் இறைச்சிகளை எடுத்துச் செல்வது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்வது குற்றமல்ல. பேருந்துகளில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்லலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. அரூர் சம்பவத்தில் புகார் அளிக்கப்பட்ட உடனேயே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.