புதுச்சேரியில் இன்று பந்த் : பஸ், ஆட்டோக்கள் ஓடாது..!
புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி வீட்டு அருகே விளையாடிய நிலையில் திடீரென்று மாயமானார்.முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 4 நாட்கள் ஆகியும் சிறுமி கிடைக்கவில்லை.இந்நிலையில் தான் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்காலில் சாக்கு மூட்டையில் அவரது உடல் இருந்தது. சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் அவரை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியிருப்பது தெரியவந்தது. ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. வீடியோ பதிவுடன் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.இந்த செய்தி ஒட்டுமொத்த புதுச்சேரியும் அதிர்ச்சியில் உறைந்தது.
இந்நிலையில் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், காவல் நிலையம் முற்றுகை ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
அதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் பந்த் போராட்டம் அறிவித்துள்ளன. போதை பொருளை கட்டுப்படுத்தாதது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடைபெற இருக்கிறது.
இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. பந்த் போராட்டத்தால் இன்று புதுச்சேரியில் பஸ்கள் ஓடாது.இதோடு டெம்போ, ஆட்டோக்களும் ஓடாது. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்.சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவும் தெரிவித்துள்ளனர்.