பெங்களூர்: ஒரு நாளுக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர்.. ஐடி நிறுவனங்கள் தவிப்பு..!
பெங்களூர்: இந்தியாவின் சிலிக்கான் வேலி, ஐடி தலைநகரம், கார்டன் சிட்டி என பல பெயர்களுக்கு சொந்தம் கொண்டாடும் பெங்களூர் நகரம், தற்போது வரலாறு காணாத கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறது.
கோடை வெயில் உச்சம் தொடுவதற்கு முன்பே, பெங்களூர் நகரவாசிகள் மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு உள்ளது கவலையை ஏற்படுத்துகிறது.
இந்த தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகப் பெங்களூரில் இருக்கும் மக்கள் பலர், வேறு நகரங்களுக்கு மாற திட்டமிட்டு வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் புதிதாக வீடு வாங்குபவர்கள் கூட பெங்களூரில் வீடு வாங்க வேண்டுமா என யோசிக்கத் துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது உருவாகியுள்ள தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையால் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனங்கள், SME நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.
பெங்களூரில் அதிகப்படியான ஐடி மற்றும் டெக் பார்க்குகள் கொண்ட முக்கியமான பகுதிகளில் ஒன்றான வைட்பீல்ட் பகுதியின் வர்த்தக அமைப்பான, வைட்ஃபீல்ட் ஏரியா காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் (WACIA) தலைவர் ராஜேஷ் மல்லையா, தொழில்துறைகள் தங்கள் செயல்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டு இப்பிரச்சனையில் இருந்து தப்பித்து வருவதாக தெரிவித்தார்.
உதாரணமாக தண்ணீர் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, பெயிண்டிங் மற்றும் கட்டுமானம் போன்ற பணிகள் தள்ளிவைக்கப்பட்டு வருவதாக ராஜேஷ் மல்லையா செய்தித்தாளுக்கு தெரிவித்தார். தொழிற்சாலைகள் இப்படியென்றால், ஐடி பார்குகளுக்கும் அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்று ராஜேஷ் மல்லையா வலியுறுத்தினார்.
உதாரணமாக 5,000 ஊழியர்கள் கொண்ட ஒரு ஐடி பார்க்கில் தினமும் சுமார் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும், இது 10-12 டேங்கர் லோடுகளுக்கு சமம் என்றார் ராஜேஷ் மல்லையா. தொழில்துறைகள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டு, பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தண்ணீர் பிரச்சனையால் தங்களின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படாவிட்டாலும், பிற தொழில்துறைகள் தங்கள் இலக்குகளை எட்டுவதில் பெரும் பாதிப்பு இருக்கும் என ராஜேஷ் மல்லையா குறிப்பிட்டார்.
உதாரணமாக, ஆட்டோமொபைல் துறைக்கு உதிரிபாகங்களை வழங்கும் OEM நிறுவனங்கள் தண்ணீர் தட்டுப்பாடு தனது உற்பத்திக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. பெங்களூரில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு, குறிப்பாக சிறு மற்றும் குறு தொழில்கள் (SMEs) மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.