பெங்களூர் – சென்னை எக்ஸ்பிரஸ் வே.. வெறும் 2 மணி நேர பயணம்.. வருது ராட்சச ரோடு.. இந்த போட்டோவை பாருங்க
சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்பட உள்ள எக்ஸ்பிரஸ் வே சாலைக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது.
சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்பட உள்ள சாலை இந்த வருட இறுதிக்குள் முடிந்து டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து உள்ளார். அதே சமயம் பாதி சாலையை முன்கூட்டியே திறக்கும் திட்டம் உள்ளது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விரைவு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படியே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் – சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர பகுதியில் மட்டுமே பணிகள் மெதுவாக நடக்கின்றது. இதனால் அந்த பகுதியில் டிசம்பரில் சாலை திறக்கப்படும். அதற்கு முன் உள்ள தமிழ்நாடு பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் அதற்கு முன்பாகவே சாலையை திறக்க முடிவு செய்துள்ளனர். பெரும்பாலும் ஜூலை மாதமே சாலையை திறக்க முடிவு செய்துள்ளனர்.
முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 2 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
சென்னை பெங்களூர் விரைவுச்சாலை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த சாலையில் கீழ்கண்ட 7 அதிரடி வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன.
வசதி 1 – சாலையில் 90 சதவிகிதம் ஸ்பீட் பிரேக் கிடையாது. 10 சதவிகித இடங்களில் மெல்லிய பிளாஸ்டிக் ஸ்பீட் பிரேக் இருக்கும். இவை உயரம் குறைவாக இருக்கும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது. அதே சமயம் வேகத்தை குறைக்க உதவும்.
வசதி 2 – சாலை விதிமீறல்களை, குற்றங்களை கண்காணிக்க கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன.
வசதி 3 – ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் கண்காணிக்கும் கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளதால் நேரடியாக பைன் போட எளிமையாக இருக்கும்.
வசதி 4 – பைக் உள்ளிட்ட மெதுவான வாகனங்கள் செல்ல தனி பைபாஸ் இருக்கும். அதனால் இங்கே உள்ளூர் வாகனங்கள் செல்லாது.
வசதி 5- உள்ளூர் வாகனங்கள் கிராஸ் செய்ய கீழ்மட்ட பாலம் இருக்கும். அதனால் நடுவில் யாரும் வருவார்களோ என்ற அச்சம் இருக்காது.
வசதி 6 – டோல் கேட்டுகள் 15 வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்லும் வகையில் விரிவாக கட்டப்பட உள்ளது.
வசதி 7 – இந்த சாலையில் சுமார் 23 கிமீ தூரத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு செல்லும் அளவிற்கு நீண்ட உயர் மட்ட சாலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்.
மேற்கண்ட பாலத்தின் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. அதோடு சென்னை பக்கம் இன்னும் சாலை பணிகள் பல இடங்களில் தொடங்கவே இல்லை. இன்னும் பல இடங்களில் 10 சதவிகிதம் மட்டுமே பணிகள் நடந்து உள்ளன. அப்படி இருக்கும் போது எப்படி இங்கே சாலை பணிகள் இந்த வருட இறுதிக்குள் முடியும். அதற்கு வாய்ப்பு இல்லவே இல்லையே என்கிறார்கள்.