பெங்களூர்: இனி எல்லாமே டபுள் டெக்கர் தான்.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

பெங்களூரு என்றாலே நினைவுக்கு வரக்கூடிய பல விஷயங்களில் டிராபிக் மிக முக்கியமான ஒன்று. பெங்களூரு டிராப்பிக்கை கடந்து ஓரிடத்திற்கு சென்று வருவதை சாதனையாகவே பார்க்கும் நிலை வந்துவிட்டது.

நாளுக்கு நாள் பெருகி வரும் நிறுவனங்கள், வாகனப் பயன்பாடு ஆகியவை காரணமாக பெங்களூருவில் எப்போதுமே வாகன நெரிசலை காணலாம்.

பெங்களூரு டிராபிக் பிரச்னை: ஆண்டின் பெரும்பாலான நாட்களுமே வாகன நெரிசலுடன் காணப்படுகின்றன பெங்களூரு சாலைகள். நாளுக்கு நாள் இந்த பிரச்னை அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இதற்கு அரசு எப்போது தீர்வு காணும் என பெங்களூரு வாசிகள் காத்துகிடக்கின்றனர். இந்த நிலையில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.

சாலையுடன் கூறிய மெட்ரோ வழித்தடங்கள்: பெங்களூருவில் மெட்ரோ வழித்தடங்களுடன் வாகன போக்குவரத்துக்கான மேம்பாலங்களும் (double-decker flyover) சேர்த்து கட்டமைக்கப்படும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார்.

இந்த double-decker flyover-ல் மேல் தளத்தில் மெட்ரோ ரயில் செல்லவும், கீழ் தளத்தில் வாகனங்கள் செல்லவும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. தற்போது மெட்ரோ திட்டங்கள் அனைத்தும் பிசியான சாலைகளில் அமைக்கப்பட்டு வரும் வேளையில் இத்தகைய double-decker flyover பெரிய அளவில் பலன் தரும்.

சாலையுடன் இணைந்த மெட்ரோ வழித்தடங்கள் தான் இனி எதிர்காலம் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார். கேஜி ஹல்லியில் மெட்ரோ சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகளின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற டி.கே.சிவக்குமார், இனி கட்டப் போகும் மெட்ரோ வழித்தடங்களில் எல்லாம் இரண்டு அடுக்கு மெட்ரோ பாலங்களாக அமைக்கப்படும் என்றார். ஏற்கனவே நாக்பூரில் இத்தகைய அமைப்பு செயல்பாட்டில் இருப்பதாக கூறினார்.

விமான நிலைய மெட்ரோ வழித்தடம் (கே ஆர் புரா – ஹெப்பல் – கெம்பேகவுடா விமான நிலையம் ) பணிகள் சிறந்த முறையில் நடைபெறுவதாக தெரிவித்த டி.கே.சிவக்குமார், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மற்றும் பெங்களூரு நிர்வாகமும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் என கூறினார்.

என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன?

பெங்களூரு மெட்ரோ நிர்வாகமும், உள்ளூர் நிர்வாகமும் மேற்கொள்ளும் இந்த கூட்டு முயற்சி டிராபிக் பிரச்னையை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை மேம்பால பணிகளுக்கான தொகையை உள்ளூர் நிர்வாகமும், மெட்ரோ வழித்தட பணிகளுக்கான தொகையை மெட்ரோ நிர்வாகமும் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெங்களூருவின் முதல் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ராகிகுட்டா மற்றும் சில்க் போர்டு இடையே 3.35 கிமீ தூரத்தில் அமைக்கப்படும் இந்த பாலத்தின் பணிகள் சில மாதங்களில் முடிய உள்ளது.

அதே வேளையில் மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் எம்பி பாட்டில், பெங்களூரு புறநகர் ரயிலின் நான்கு வழித்தடங்களும் 2024 டிசம்பரில் தயாராகிவிடும் என தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *