பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
இண்டிகோ தனது உள்நாட்டு நெட்வொர்க்கில் லட்சத்தீவில் உள்ள அகத்தி தீவை சேர்ப்பதாக அறிவித்துள்ளது. மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் அழகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திற்கு பின்னர் உலக மக்களின் வெளிச்சத்துக்கு வந்தது.
இதன் மூலம் லட்சத்தீவுக்கான விமான சேவை விரிவாக்கம் இந்திய சுற்றுலாத்துறைக்கு மிகவும் அவசியமாக்கியது. இண்டிகோ நிறுவனம் அகத்தி-ஐ அதன் 88வது உள்நாட்டு இலக்காகவும், 6E நெட்வொர்க்கில் ஒட்டுமொத்தமாக 121 வது இடமாகவும் சேர்த்துள்ளது. மார்ச் 31 முதல், இண்டிகோ பெங்களூரு மற்றும் அகத்தி இடையே விமான சேவை தொடங்கும்.
இது லட்சத்தீவுகளின் அழகிய தீவுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு நேரடி இணைப்பை வழங்குகிறது. இண்டிகோ சேவையின் அறிமுகத்தின் மூலம் அடுத்தடுத்து பல நிறுவனங்கள் இப்பகுதியில் சேவையை வழங்க உள்ளது.
மேலும் இண்டிகோ மற்றும் பிற விமான நிறுவனங்களின் சேவை மூலம் இந்திய நிலப்பரப்புடன் இத்தீவின் இணைப்புகளை வலுப்படுத்தும். அற்புதமான கடற்கரைகள் மற்றும் கடல் வாழ்க்கைக்கு பெயர் பெற்ற அகத்தி, லட்சத்தீவுக்கான நுழைவாயிலாக விளங்குகிறது. ஆழ்கடலில் மீன்பிடித்தல், ஸ்கூபா டைவிங் மற்றும் படகோட்டம் போன்ற செயல்பாடுகளை விரும்பும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது.
இண்டிகோ நிறுவனம் இந்த விமான வழித்தடத்தில் ஏடிஆர் விமானத்தைப் பயன்படுத்தும், சுமார் 78 இருக்கைகள் கொண்ட இந்த விமானம் இப்புதிய் பாதையில் பயணிக்க உள்ளது. இந்த பெங்களூர் – அகத்தி வழித்தடத்தில் ஆரம்பக் கட்டணம் ரூ.6,699 ஆகும்.
இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா கூறுகையில், விமான நிறுவனத்தின் உள்நாட்டு இடங்களுக்கு லட்சத்தீவுகளைச் சேர்ப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பயணிகளுக்கு மலிவு விலையில், சரியான நேரத்தில் மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவங்களை வழங்க இண்டிகோ உறுதிப்பாட்டை கொண்டுள்ளதாக கூறினார்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்ததைத் தொடர்ந்து, பல இந்தியர்கள் சுற்றுலா பயணிகள் லட்சத்தீவுகளை மாற்று இடமாக கருதுகின்றனர். இப்பகுதியின் அழகிய இயற்கை மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் முன்முயற்சிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக மாறும் என கருதப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் லட்சத்தீவு உள்ளிட்ட இந்திய தீவுகளில் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் லட்சத்தீவில் துறைமுக மற்றும் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதில் இந்திய அரசு கவனம் செலுத்த உள்ளது.