பெங்களூர்: 15 லட்சம் ஐடி ஊழியர்களுக்கு Work From Home.. இதுதான் ஒரே தீர்வு….!!
பெங்களூரு நகரில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, மக்களின் அன்றாட வாழ்வை புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில்லை. இதற்கு தற்காலிக தீர்வாக, IT துறை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் Work From Home வசதியை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
ஏற்கனவே பல நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம், ரிமோட் வொர்க் சலுகையை அளித்துள்ள வேளையில் தற்போது கட்டாய வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கர்நாடக அரசின் தகவல்படி, பெங்களூரு தினசரி 2,600 மில்லியன் லிட்டர் (MLD) தண்ணீர் தேவை, இதில் சுமார் 500 மில்லியன் லிட்டர் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக WFH முறையை அமல்படுத்துவது மூலம் பெங்களூரில் மக்கள் தொகையைக் குறைத்து, தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உதவும் என்று இணையவாசிகள் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், நீதிபதி கே. ஸ்ரீதர் ராவ் உள்ளிட்ட பல சட்ட நிபுணர்களும், நீர் மேலாண்மை நிபுணர்களும், பெங்களூரு தண்ணீர் பிரச்சனை தீரும் வரை, வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை ஊக்குவிக்குமாறு கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே. ஸ்ரீதர் ராவ், பெங்களூருவில் உள்ள சுமார் 15 லட்சம் ஐடி ஊழியர்களுக்கு குறுகிய கால தீர்வாக வீட்டிலிருந்து பணிபுரியும் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
ஒரு வருட காலத்திற்கு வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை அனுமதிப்பதன் மூலம், சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பலாம். இதன் மூலம் பெங்களூருவின் வளங்கள் மீதான அழுத்தம் குறையும் என்றும் நீதிபதி ஸ்ரீதர் ராவ் கருத்து தெரிவித்தார்.
1980 களில் பெங்களூரு மக்கள் தொகை 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை இருந்ததாகவும், தற்போது அது 1.5 கோடியை தாண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கர்நாடக மாநிலம் 2003-04 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வறட்சியை எதிர்கொண்ட போதிலும், அப்போதைய மக்கள் தொகை குறைவாக இருந்ததால், தண்ணீர் தட்டுப்பாடு பெரிதாக உணரப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் பெங்களூரில் ஏரி மீட்டெடுப்பு, மழை நீர் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.